திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எனக்கு வரைந்த அன்பின் மடல் என்று தன்னை பாராட்டி எழுதிய திமுக எம்.எல்.ஏ.வின் கடிதத்தை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதுதொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ், ஒரு கடித்தத்தை பதிவிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில்,  'ஐயா, இன்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் தமிழக டிஜிபி திரிபாதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளீர்கள். தமிழ் நாடு காவல் துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடிதத் தொடர்புகள். கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வட இந்திய அதிகாரி உத்தரவிட்டிருப்பதை தாங்கள் பாராட்டியுள்ளீர்கள். மற்றவர்கள் இதனைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். ஆனால், தாங்கள் ‘காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும் கனிவு பெருகட்டும்’ எனப் பாராட்டியிருப்பது ரசிக்கத்தக்கது.
ஐயா, தாங்கள் கட்சியா நடத்துகிறீர்கள். பல்கலைக்கழகத்தை அல்லவா நடத்துகிறீர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் மக்கள் பிரச்சினை எது என்றாலும் ‘Immediate reaction' (உடனடியாக கருத்து தெரிவிப்பது) செய்வது தாங்களும் மரியாதைக்குரிய டாக்டர். அன்புமணியும்தான்” என்று தெரிவித்துள்ளார்.


இந்தக் கடிதத்தில் அந்த முன்னாள் எம்.எல்.ஏவின் கையெழுத்தை கட் செய்துவிட்டு டாக்டர் ராமதாஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். திரிபாதி உத்தரவுக்குப் பாராட்டு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ராமதாஸுக்கு முன்பே கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.