மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த பாமக, கூட்டணி குறித்து அதிமுகவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது. 

அதேபோல, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த சில மாதங்களாக  தமிழக அரசை வரவேற்கும் விதமாகவும் வலியுறுத்தும் விதமாகவுமே அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

அதேபோல பிஜேபியையும் கடுமையாக விமர்சனம் செய்துவந்த அவர், கடந்த இடைக்கால பட்ஜெட்டை தடவிக்கொடுத்து அறிக்கை வெளியிட்டார். பாமகவின் நடவடிக்கையை வைத்து ஊடகங்கள் கூட்டணி பற்றிய பல்வேறு செய்தியை வெளியிட்டு வந்தது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமையவுள்ளதாக  சொல்லப்படும் நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை அதிமுகவும் பாமகவும் வரவேற்றது  ஊடகங்கள் தலைப்பு செய்தியிலேயே போட்டது.  அதிமுக மற்றும் பிஜேபியை கொஞ்சம் கூட விமர்சிக்காததால் தொலைக்காட்சிகளில் விவாதமே நடந்தது.

வட மாவட்டங்களில் முன்பை விட தற்போது வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதால்,  சுமார் ஆறு தொகுதிகளில் பாமக வோடு கூட்டணி வைப்பவர்களுக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதால், ஊடகங்கள் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அதாவது பாமக ரகசிய டீல் பேசுகிறது, அதிமுக, பிஜேபியை விமர்சிக்கவில்லை போன்ற செய்திகள் பாமக நிறுவனர் ராமதாஸை வெறுப்படைய வைத்துள்ளது.

இதனால் கடுப்பான டாக்டர் ராமதாஸ், மக்களவைத் தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்து தவறான செய்திகளை தயாரித்து வெளியிடுவதையே சில ஊடகங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. யாருடைய கட்டளையை  நிறைவேற்ற அவை அவ்வாறு செய்கின்றன? ஊடகங்கள் ஊடக தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்; தரகு வேலை செய்யக்கூடாது! என ட்வீட் போட்டுள்ளார்.

இதற்கு முன்பு கூட, "கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தே தீரும். - முன்னோர்கள் சொன்னது" என பதிவிட்டிருந்தார். அதாவது கூட்டணி பற்றி பேசினார் அதற்கான அறிவிப்பை நாங்களே வெளியிடுவோம் நீங்களாகவே ஒரு முடிவெடுக்க வேண்டாம் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.