பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30-ம் தேதி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

இந்தியா - சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது மோடி பேசிய போது, ’உலகில் மிகவும் பழமையான மொழி தமிழ். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மிகவும் சிறப்பானது. தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது” என பெருமிதத்துடன் பேசினார்.

 

பிரதமர் மோடியின் பேச்சை அரசு தொலைக்காட்சியான தூர்தர்‌ஷனில் நேரலை செய்யவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பு பிரிவின் உதவி இயக்குனர் வசுமதியிடம் பிரசார் பாரதி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது மோடியின் நிகழ்ச்சிகளை 18 கேமிராக்கள் மூலம் பதிவு செய்து தூர்தர்‌ஷனில் ஒளிபரப்பு செய்தது தெரிய வந்தது. ஆனால், நேரலை செய்யாதது குறித்து விசாரணை நடத்தியதில் உரிய பதிலை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை. 

இந்நிலையில் உதவி இயக்குனர் வசுமதியை சஸ்பெண்டு செய்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.