dont stop the campaign in rk nagar says ops

ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டாலும், நாம் நமது பிரச்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று தமது ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார் ஓ.பி.எஸ்.

ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டதை அடுத்து, தினகரன் தரப்பை போல பெரிய அளவில் உணர்ச்சி வசப்படாமல், லேசான அறிக்கையுடன் நின்று விட்டார் ஓ.பி.எஸ். அதுவும், தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டுடன்.

இந்நிலையில், வீனஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஓ.பி.எஸ். அந்தக் கூட்டத்தில் பாண்டியராஜன், மதுசூதனன், செம்மலை, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். 

அப்போது பேசிய பன்னீர், தேர்தல் நிறுத்தப்பட்டு விட்டது என்பதால் நாம் அமைதியாக இருந்துவிடக் கூடாது. இனிதான் நம்முடைய வேகத்தை நாம் இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில், ஜெயலலிதாவை கொன்றது சசிகலாவும், அவரது குடும்பமும்தான் என்று சொன்னோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், அந்த விஷயம் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆர்.கே.நகரில் இனி எப்போது தேர்தல் வந்தாலும், மதுசூதனன்தான் வேட்பாளர். அதனால் ஆர்.கே.நகர் மக்களிடம் நாம் தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் கண் முன்னே நின்று கொண்டே இருக்க வேண்டும்.

தினகரன் தரப்பில் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், அதையும் மீறி நாம் ஜெயிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கி வைத்திருக்கவேண்டும். ஜெயலலிதா மரணம் பற்றி நாம் இன்னும் அதிகமாக பேசவேண்டும் என்று அவர்களிடம் ஓ.பி.எஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.

பன்னீர் சொன்னதை அனைவரும் முழுமனதுடன் ஆமோதித்து இருக்கிறார்கள். மேலும் மதுசூதனன் எழுந்து, நானும் தொகுதி மக்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இவ்வாறு, அடுத்தடுத்து அணுகுண்டுகளை போடப்போகும் ஓ.பி.எஸ் தரப்பை, தினகரன் தரப்பு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.