மாணவர்கள் இங்கிலீஷ்ல பேசுவதற்கு  கற்றுக் கொள்ள வேண்டும் அப்போது தான் முன்னேற முடியும் என்று பேசிய நடிகர் ரஜினிகாந்த். தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்று  தெரிவித்தார். 

சென்னையில்  வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அவர் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பின் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் அவரது பேச்சு எப்படி இருக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புடன்  ரசிகர்கள் கூடியிருந்தனர்.

அவர்களிடம் பேசிய ரஜினி, தம்மை வரவேற்க ரசிகர்கள் பேனர்கள் வைக்க கூடாது என்று கூறினார். தாம் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் ஏ.சி சண்முகம் ஒருவர் என்றும் தெரிவித்தார்.

தன்னை யாரும் அரசியலுக்கு சிவப்பு  ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பவில்லை. தன்னை ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று ரஜினி கூறினார். தற்போது  தமிழகத்தில் நல்ல தலைவருக்கும், தலைமைக்கும் வெற்றிடம் உள்ளதாக  கூறிய அவர் அந்த வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நேர்மையாக வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடத்துவதே ஆன்மீக அரசியல். சாதி மதசார்பின்றி ஆட்சி நடத்துவதே ஆன்மிக அரசியல் என்று ரஜினி விளக்கம் அளித்தார்.

தொடந்து அங்கு கூடியிருந்த மாணவர்களைப் பார்த்து அரசியலை தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் ஈடுபடாதீர்கள் என அட்வைஸ் பண்ணினார்.

மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாட கற்றுக் கொள்ள வேண்டும் என  தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்,  தமிழில்  பேசினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது என்றும்  தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்றும் ரஜினி கூறினார். 

அண்மையில் புதிதாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கிய கமலஹாசன், தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அனைவரும் தமிழில் பேசுங்கள் என்று கூறியிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.