அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் வழிபாடு நடைபெற்று வருவதாகவும், தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக்க பாஜக வலியுறுத்தும் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

4-ம் நாள் வெற்றிவேல் யாத்திரையை சென்னை கோயம்பேட்டில் இருந்து பாஜக மாநில தலைவர் முருகன் தொடங்கினார். யாத்திரையைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ’’அரசின் தடையை மீறி வெற்றிவேல் யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வெற்றிவேல் யாத்திரை தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

தனியார் டிவி செய்தியாளரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் வழிபாடு நடைபெற்று வருகிறது. தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறதா? என்பதை கோயிலுக்கு சென்று திமுக எம்.பி. கனிமொழி அறிந்துகொள்ள வேண்டும்.

முருகனின் "வேல்" ஆயுதமா என்பதை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகராதியைப் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். குறை கூற எதுவும் இல்லாததால் ஏதேதோ கருத்துகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. வாக்கு அரசியலுக்காக வேடமிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.

பீஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மத்தியில் ஆட்சிமொழியாக தமிழைக் கொண்டுவர தமிழக பாஜக சார்பில் வலியுறுத்த உள்ளேன். தமிழர் நலன்களுக்காக குரல் எழுப்பும் முதல் கட்சி பாஜகதான்’’ என அவர் தெரிவித்தார். வேல் யாத்திரையின் நான்காம் நாளான இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி வழியாக திருவள்ளூர் சென்று பின் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 4வது நாள் வேல் யாத்திரையை முன்னிட்டு, கோயம்பேட்டில் இருந்து யாத்திரை செல்ல உள்ள இடங்கள், வழித்தடங்களில் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.