திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் என தமிழக பல கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, பாஜக,  தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்து வருவதாக பொது மக்களிடம் கருத்து நிலவுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு அதிமுக அரசை பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் சென்னை டு சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக பாமக இத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை செயல்படுத்தப்படும் பகுதிகளுக்குச் சென்று குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் பாமக இளைஞரணி  கூட்டம் நடைபெற்றது. அதில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுப் பேசினார். இதையடுத்து உரையாற்றிய டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் தற்போது ஆபத்தான மூன்றெழுத்துக் கட்சி ஒன்று காலுன்றுவோம், வேரூன்றுவோம், வளருவோம் என்று கிளம்பி இருக்கிறது.

ஆனால் அந்த அமைப்பு மிக ஆபத்தானது, இளைஞர்களாகிய நீங்கள் அக்கட்சியை மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அக்கட்சியை வளரவோ, வேரூண்றவோ விடக் கூடாது என தெரிவித்தார்.