உதயநிதி ஸ்டாலினோடு என்னை ஒப்பிடாதீர்கள். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது. எனக்கு இன்னும் 30 வயது கூட தாண்டவில்லை என திருப்பூரில் நடந்த தேமுதிக முப்பெரும் விழாவில்  தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார்.

தேமுதிக 15ஆம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்தநாள், நலத்திட்ட உதவிகள் விழா என முப்பெரும் விழா திருப்பூரில் உள்ள வேலன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று ஓய்விலிருந்து வரும் விஜயகாந்த் பல மாதங்களுக்குப் பிறகு நேற்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் தேமுதிக. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசும்போது, உதயநிதி ஸ்டாலினை போல் தேமுதிகவில் இளைஞரணி செயலாளர் பதவி எனக்கு வழங்கப்படுமா? என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு விஜயகாந்தின் மகன் என்ற பொறுப்பு ஒன்றே போதும், அதை காப்பாற்றுவதே எனது நோக்கம்.

உதயநிதி ஸ்டாலினோடு என்னை ஒப்பிடாதீர்கள். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது. எனக்கு இன்னும் 30 வயது கூட தாண்டவில்லை. தேமுதிக.வின் தொண்டனாக, உங்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அனைவரும் இதற்காக கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள். புது எழுச்சியோடு தேமுதிக, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

இதற்கு முன்பாக பேசிய  விஜயகாந்த்,  ஒருநாள் ஒருபொழுதாவது உங்கள் விஜயகாந்துக்கும் விடியும். அப்போது நான் உங்களைத் தங்கத்தொட்டிலில் வைத்துத் தாலாட்டுவேன். அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுகிறேன்” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.