பொங்கல் பரிசு தொகுப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பொய் பிரசாரம் செய்கின்றனர்; ஆதாரங்களுடன் நேரில் வந்தால் பதில் கூற தயார்.
ஆளும் அரசை குறைம்கூறும் நோக்கத்தில் ஓ.பி.எஸ். தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு சார்பில், பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 'இந்த திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பி வருவதால், இப்பணிகள் முறையாக நடைபெறுவதையும், தரமான பொருட்கள் எந்த விதமான புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்திட வேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 
மேலும் சென்னை, ராயபுரம், தொப்பை தெரு மற்றும் புது வண்ணாரப்பேட்டை, டாக்டர் விஜயராகவலு தெரு ஆகிய இடங்களிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று, சிறப்பு பொங்கல் தொகுப்புப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணியையும் ஆய்வு செய்தார். நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் தொடர்பான குற்றச்சாட்டு முதல்வரையே ஆய்வு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.
இது ஒருபுறமிருக்க, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ‘’பொங்கல் பரிசு தொகுப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பொய் பிரசாரம் செய்கின்றனர்; ஆதாரங்களுடன் நேரில் வந்தால் பதில் கூற தயார். அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள்; ஆளும் அரசை குறைகூறும் நோக்கத்தில் ஓ.பி.எஸ். தவறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார் .

பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை . சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு என்ற பெயரில் பணம் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை நிறைப்வேற்றும் வகையில் கொரோனா நிதி ரூ.4000 வழங்கப்பட்டது; திமுக ஆட்சியில் கொடுத்து வந்த பொங்கல் பரிசு தொகுப்பை 2012ல் அதிமுக ஆட்சி நிறுத்தியது. அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
