தமிழகத்தில் மேலும் ஒரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவ  வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ளது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. எனவே கொரோனா வைரஸைக் கட்டுபடுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.


இந்நிலையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின்போது ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா வேண்டாமா என்பது பற்றி பேசும்வகையில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். வல்லுநர் குழுவில் இடம்பெற்ற மருத்துவர் பிரதீபா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.


மருத்துவர் குழுவின் பரிந்துரை மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் நாளை பிரதமருடனான ஆலோசனையில் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.