நடந்து முடிந்த 22 தொகுதி இடைத்தேர்தலில்  3 இடங்களை மட்டுமே அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலுடன் 22 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், இந்தியா டுடே கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் திமுக 14 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 5 தொகுதிகளில் திமுக -அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி தொடர குறைந்த பட்சம் 4 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையெனில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும் நிலை உருவாகும். தற்போது அதிமுக உறுப்பினர்களின் பலம் 113 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்கள் தேவை. 

திமுக ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 98 ஆக உள்ளது. இந்த 14 தொகுதிகளையும் சேர்த்தால் 112 உறுப்பினர்கள் பலமாக கூடும். ஆனாலும் ஆட்சி அமைக்க முடியாது. ஒருவேளை கடும் போட்டி நிலவுவதாக கூறப்படும் ஐந்து தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சிக்கு பாதகமில்லை. அதே நேரம் இந்த ஐந்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றினால் அதன் பலம் 118 ஆக கூடும். அப்படி நடந்தால் திமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.