பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இன்று புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் மோடி கட்சி தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார். 

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு 282 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று இருந்தது.1984-க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையையும் பாஜக பெற்றுள்ளது. 

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இடையிலான கூட்டத்தில் புதிய அமைச்சரவை குறித்து விவாதம் முக்கிய பங்கு வகிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நித்தின் கட்காரி டெல்லி சென்றுள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பியூஷ் கோயல் அடுத்த நிதி அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமித் ஷாவும் இந்த முறை பாஜக சார்பில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால் அவருக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. ராஜ்நாத் சிங்கிற்கு மத்திய அமைச்சரவையில் கண்டிப்பாக இந்த முறையும் ஒரு இடம் இருக்கும். அதேபோல் ஏற்கெனவே இருந்த சுஷ்மா ஸ்வராஜும் அமைச்சர் பட்டியலில் இடம்பெறுகிறார். ராகுல் காந்தியை வீழ்த்தி அசரடித்ததால் ஸ்மிருதி ராணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

 

ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபா மூலம் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைச்சர் பட்டியலில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்ஜ்கண்ட் மாநிலங்களில் வென்ற எம்.பி.களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். இந்த முறை இளம் எம்.பிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

அதே போல் தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் வென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் தேனி தொகுதி எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் அமைச்சர் பட்டியலில் இடம்பெற உள்ளார். அதற்காக்ன பேச்சுவார்த்தையை தேர்தல் ரிசல்டிற்கு முன்பே பாஜகவிடம் நடத்தி உறுதிபடுத்தி விட்டார் ஓ.பி.எஸ். அதன்படி ஓ.பிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம். தகவுல் தொடர்பு, அல்லது ஜவுளித்துறை இரண்டு துறைகளில் ஒன்றில் ஓ.பி.ரவீந்திரநாத் இணை அமைச்சராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.