Do not we have Narayanasamy in us
தமிழக கவர்னராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித், நிர்வாக நடைமுறைகளின் பார்வையாளராக இல்லாமல் பங்குதாரராக இருக்கும் விஷயம் ஊரறிந்ததுதான். கோயமுத்தூர், நெல்லை, கன்னியாகுமரி, சேலம் என்று பல மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை நடத்தி அதிகாரிகளை ஆய்வு சுளுக்கெடுத்து வருகிறார்.
ஆளும் அ.தி.மு.க. அமைச்சரவைக்கு கவர்னரின் இந்த கடமையுணர்ச்சி பெரும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்கட்சிகள் கூட ‘மாநில சுயாட்சி தத்துவத்தை உடைக்கிறார் கவர்னர்’ என எகிறியடிக்கும் நிலையில் தங்கள் வாயை திறக்க அ.தி.மு.க.வினருக்கு வழியில்லை. காரணம் முதல்வர், துணை முதல்வர் அடங்கிய அமைச்சரவையின் கடிவாளம் இருப்பது டெல்லி கையில்.
இந்நிலையில் பக்கத்து மாநிலமான புதுவையில் கவர்னர் கிரண்பேடியும் இப்படித்தான் நிர்வாக விஷயங்களில் தலைநீட்டுகிறார். இதை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றனர். ஆய்வுக்கு வரும் கவர்னரின் காரை மறித்து உட்காருமளவுக்கு மாநில சுயாட்சி தத்துவத்தை அங்கு காப்பாற்றுகின்றனர்.
இந்நிலையில், ‘2018ல் அதிகார மாற்றம் வரும்’ என கிரண்பேடி அண்மையில் பேசியதற்கு மிக வன்மையான எதிர்ப்பை கொட்டித் தீர்த்திருக்கிறார் நாராயணசாமி. ‘எதிர்கட்சி தலைவர் போல் பேசுவதுதான் கவர்னரின் கெளரவமா?’என்று நாராயண சாமி கேட்டிருப்பது கிரணை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
தற்போது இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர். அமைச்சர்களுடன் சாதாரண ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர் முதல்வரும், துணை முதல்வரும். அப்போது எழுந்த தென் தமிழகத்தை சேர்ந்த அந்த அமைச்சர் “இத்தினியூண்டு மாநிலம் புதுச்சேரி. அங்கேயிருக்கிற முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இருக்கிற தன்மான உணர்வும், சுயாட்சி வெறியும் நமக்கில்லையா? நாராயணசாமிக்கு இருக்கிற ஆதங்கம் ஏன் நமக்கில்லாம போச்சு? சும்மாவே நம்மை பி.ஜே.பி.ட்ட அடிமைப்பட்டு கிடக்கிறோமுன்னு பேசுறாங்க.
இந்த நேரத்துல கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்கு பொங்கலுக்கு முன்பு தீர்வு காணப்படும் அப்படின்னு ஏதோ முதல்வர் ரேஞ்சுக்கு கவர்னர் பேசியிருக்கிறதை வாயை மூடி கேட்டுகிட்டிருக்கோம் நாம. இப்படியொரு சம்பவம் புதுவையில நடந்திருந்தா கொதிச்சுப் போயிருக்கும் அமைச்சரவை.
அட இதக்கூட விட்டுத்தள்ளுங்க. அந்த ஆடிட்டர் நம்ம அமைச்சரவை தலைமையை பத்தி பேசுன அபத்தமான வார்த்தைக்கு ஜெயக்குமாரோட பதில் மட்டுமே போதுமுன்னு நாம நினைச்சு கடந்து போனது கேவலத்திலும் கேவலம்ணே!” என்றாராம்.
அவரது கொதிப்பில் முழுக்க முழுக்க உண்மை இருந்ததால் வாயை மூடி அமைதி காத்திருக்கின்றனர் சக அமைச்சர்களும், அமைச்சரவை தலைமையும்.
ஆஹாங்! பொதுவா இவரு காமெடியாதானே பேசுவாரு?
