எந்த சந்தேகங்கள் ஏதும் எழுப்பப்படாத நிலையிலுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 16ம் தேதி நாடெங்கும் தொடங்க இருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்துக்கும் அவ்வாறு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் 'கோவேக்சின்' தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன. அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை மத்திய அரசு தரவில்லை. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில அரசு தனது மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவ சங்கத்தினரும் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். எனவே, அத்தகைய அய்யங்கள் ஏதும் எழுப்பப்படாத நிலையிலுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் முன்களப்பணியாளர்கள் யாருக்கேனும் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பாதிப்பு நேர்ந்தால் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அது இதுவரை வழங்கப்படவில்லை. அவ்வாறிருக்கும்போது முன்களப்பணியாளர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமாயின் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
எனவே, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் எவருக்கேனும் பக்க விளைவு ஏற்பட்டால் அதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தற்போது 10 பேருக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்து ஒரே பாட்டிலில் அடைத்து அனுப்பப்படுகிறது. இந்த மருந்தை திறந்தால் மூன்று மணிநேரத்துக்குள் அதைப் பயன்படுத்தி விட வேண்டும்; இல்லாவிட்டால் அது காலாவதி ஆகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் நேரத்தில் மருந்து ஏராளமாக வீணாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஊசியுடன் கூடிய ஒரு டோஸ் மருந்தை தனித்தனியே வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதுதான் இந்த ஊசியைப் போட்டுக்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 15, 2021, 10:10 PM IST