இந்தியாவின் பொறுமையை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது எனவும், கால்வன் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த வீரர்களின் உயிர் தியாகம் ஒருபோதும் வீணாகாது எனவும் இந்திய ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ்  முகுந்த் நர்வானே சீனாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாரதப் பிரதமர் மோடி ஆகியோர் ராணுவ தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையை பாதுகாக்க போராடி உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்திய ராணுவத்தின் வீரமிக்க ஆண் மற்றும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட் செய்துள்ளார். 

இந்திய ராணுவம் வலிமையானது, துணிச்சலானது, உறுதியானது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய மக்களின் சார்பாக நம் ராணுவத்திற்கு வணக்கம் செலுத்துவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே,  சீனாவுடனான தற்போதைய பதற்றம் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எல்லையில் நிலையை மாற்றுவதற்கான சதி மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு இந்தியா பொருத்தமான பதிலடி கொடுத்துவருகிறது. கால்வன் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். உரையாடலின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா தயாராக உள்ளது. 

இந்தியாவின் பொறுமையை சோதிக்க முயற்சித்து யாரும் தவறு செய்ய வேண்டாம். பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் இன்னும் தொடர்கிறது. எப்போதும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது. அதேநேரத்தில் இந்திய ராணுவம் எதிரிகளுக்கு பொருத்தமான பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றோம். எல்லையில் ஊடுருவிய சுமார் 300 முதல் 400  பயங்கரவாதிகள் தங்கள் பயிற்சி முகாம்களில் உள்ளனர். கடந்த ஆண்டை விட 44% அதன் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இது பாகிஸ்தானின் திட்டத்தையும் அதன் நோக்கத்தையும் காட்டுகிறது என பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளையும்  ராணுவ தளபதி நர்வானே எச்சரித்துள்ளார்.