Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் இந்த ஆலை அமைந்தால் ஆண்மைக் குறைவு ஏற்படும்.. அலறும் அன்புமணி..!

இலவசமாக தருகிறார்கள் என்பதற்காக நஞ்சை குடிக்க முடியாது; தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியாது என்பதைப் போல, சமூக பங்களிப்பு நிதியின் கீழ் இலவசமாக அளிக்கப்பட்டாலும் கூட, சென்னை மாநகரின் காற்றினை மாசுபடுத்தி மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

Do not start a mobile plant that burns plastic waste... Anbumani ramadoss
Author
Chennai, First Published Apr 30, 2022, 2:51 PM IST

சென்னை மாநகரில் பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலை அமைப்பது மிக மிக மோசமான மற்றும் ஆபத்தான முயற்சி என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

எரியூட்டும் நடமாடும் ஆலை

இதுதொடர்பாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மாநகரில் பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை (Mobile Incinerator Plant) சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சில பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புடைமை  நிதியின் கீழ் வழங்கிய ரூ.2.10 கோடியில் வாங்கப்பட்ட குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னையில் திடக்கழிவுகள் உருவாகும் இடங்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அழிப்பது தான் மாநகராட்சியின் திட்டம். ஆனால்,  இது மிக மோசமான, ஆபத்தான முயற்சி ஆகும்.

ஆண்மைக் குறைவு

எரியூட்டும் நடமாடும் ஆலைகளில் எரிக்கப்படும் குப்பைகளிலிருந்து  டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு  உள்ளிட்ட வாயுக்களும், காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் வெளியாகும். இவற்றில் பெரும்பான்மையானவை மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; காற்றில் அழியாத தன்மை கொண்ட  இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய நச்சுப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல் நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் இது கடுமையாக பாதிக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப் படுவார்கள்.

  தற்கொலைக்கு சமம்

போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் எரியூட்டும் நடமாடும் ஆலைகளால் படிப்படியாக ஏற்படும். ஏற்கனவே சென்னையில் ஆண்டுக்கு 11,000 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இது நிலைமையை மோசமாக்கும். ஒட்டுமொத்த உலகிலும் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் தீமைகளுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதல் தான். புவி வெப்பமயமாதலுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று குப்பையை எரிப்பதாகும். ஒரு டன் பிளாஸ்டிக் குப்பையை எரித்தால் அதிலிருந்து 3 டன்  கரியமிலவாயு வெளியாகும். மொத்தத்தில் எந்த நன்மையும் செய்யாத, புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களை வெளியேற்றுதல், காற்று மாசு, உடல்நலக் கேடு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் அமைப்பது தற்கொலைக்கு சமமான முடிவு ஆகும். 

தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியாது

அதிலும் குறிப்பாக, சென்னை பெருநகரில் காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் சுழலில், சென்னை மாநகராட்சியே குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை  அமைப்பதன் மூலம் காற்று மாசுபாட்டை திணிப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இலவசமாக தருகிறார்கள் என்பதற்காக நஞ்சை குடிக்க முடியாது; தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியாது என்பதைப் போல, சமூக பங்களிப்பு நிதியின் கீழ் இலவசமாக அளிக்கப்பட்டாலும் கூட, சென்னை மாநகரின் காற்றினை மாசுபடுத்தி மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

பிளாஸ்டிக் பொருட்கள் தடை சட்டம்

எனவே, பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி மூட வேண்டும்; புதிய ஆலைகளையும் இனிமேல் தொடங்கக்கூடாது. அத்துடன், இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், தமிழ்நாடு அரசின் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சட்டம் உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி குப்பைகள் பிரச்சினைக்கு தமிழக அரசு நிரந்தரத் தீர்வு கான வேண்டும். கூடுதலாக, பூஜ்ய குப்பை (Zero Waste) எனப்படும் குப்பையில்லா மாநகர கோட்பாட்டையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios