2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.கவிடம் இருந்து விசிக மற்றும் மதிமுகவிற்கு தற்போது வரை அழைப்பு விடுக்கவில்லை.

காங்கிரசுடன் தொகுதி உடன்பாட்டை முடித்த சூட்டோடு இதர கட்சிகளுக்கும் முடித்துவிட தி.மு.க தீவிரம் காட்டுகிறது. அந்த வகையில் விசிக, இடதுசாரிகள், மதிமுக, கொங்கு, முஸ்லீம் லீக் கட்சிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவற்றில் முஸ்லீம் லீக் கட்சியுடன் மட்டும் தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஒரு தொகுதிக்கு முஸ்லீம் லீக் ஓ.கே சொல்லிவிட்டது. 

ஆனால் வி.சி.க., ம.தி.மு.கவுடனான பேச்சுவார்த்தையில் துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன. வைகோ 4 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதாக தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதே போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இரண்டு தொகுதிகள், அதுவும் தாங்கள் விரும்பும் தொகுதிகள் என்று விடாப்பிடியாக இருப்பதாக சொல்கிறார்கள். 

ஆனால் தி.மு.க தரப்பிலோ விடுதலைச் சிறுத்தைகளுக்கு விழுப்புரம் தொகுதியும், மதிமுகவுக்கு ஈரோடு தொகுதியும மட்டும் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு தொகுதி என்பதை ஏற்கவே முடியாது என்று திருமாவளவன் திட்டவட்டமாக கூறி வருகிறார். இதே போல் வைகோவும் ஒரே ஒரு தொகுதி தான் என்று பேச்சுவார்த்தையின் போது துரைமுருகன் கூறியதால் கடும் அதிருப்தியில் உள்ளார். 

இதனை தொடர்ந்து ஸ்டாலினிடம் நேரடியாக பேச வைகோ முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் வைகோவுடன் தற்போதைக்கு பேசும் முடிவில் ஸ்டாலின் இல்லை என்கிறார்கள். இதனால் தி.மு.க கூட்டணியில் தங்களுக்கு தொகுதி கிடைக்குமா என்கிற சிந்தனையில் திருமா மற்றும் வைகோ ஆழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் 2வது கட்ட பேச்சுக்கு மதிமுக மற்றும் விசிகவிற்கு தற்போது வரை அழைப்பு இல்லை. 

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு கட்சிகளும் விழி பிதுங்கி நிற்கின்றன. அதே சமயம் கூட்டணிக்கு தே.மு.தி.கவை கொண்டு வர தி.மு.க தரப்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு வேளை தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தால் நிச்சயமாக விசிக மற்றும் மதிமுகவிற்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது என்கிறார்கள். இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று வைகோ, திருமா தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசிக்க தொடங்கியுள்ளனர்.