மக்களவை தேர்தலில் வெற்றியை தொடர்ந்து சென்னையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.  

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. திமுக 19 மக்களவை தொகுதிகளிலும் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் 13 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற எம்.பி.க்கள் 19 பேர், எம்.எல்.ஏ.க்கள் 13 பேருடன், சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து, பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகம் நோக்கி ஊர்வலமாக சென்றார். அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

இதைத் தொடர்ந்து, புதிதாக தேர்வாகியுள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பெரியார் திடலுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தும் புதிதாக தேர்வாகியுள்ள திமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துப் பெற்றனர். 

பின்னர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் (96). கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி க.அன்பழகன் படுத்தப்படிக்கையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்றி பெற்ற திமுகவினர் பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுகவின் வெற்றி சந்தோஷத்தை அறிந்த க.அன்பழகன் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார்.