கோவிலுக்குள் நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலரை திட்டியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவிலுக்குள் நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலரை திட்டியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை மண்டலத்தில் கிருஷ்ணா நகர் பகுதியில் ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதை பார்வையிட திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா நைட்டி அணிந்து சென்றதாக தெரிகிறது. அதனை அக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் கண்ணன் எதிர்த்துள்ளார். அப்போது பெண் கவுன்சிலர் மஞ்சுளா ராஜமோகன் அவரை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் கண்ணன் கோவிலுக்குள் இது போன்ற ஆடைகள் எல்லாம் அணிந்து வரக்கூடாது, கோவிலுக்குள் வர வேண்டுமென்றால் அதற்கு முறையான ஆடைகள் இருக்கிறது. இது போன்ற ஆடைகள் கோவில் ஆகமத்திற்கு எதிரானது என மஞ்சுளாவிடம் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவுன்சிலர் மஞ்சுளா ஆதரவாளர்கள் கண்ணனை தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் ஆகம விதிகள் குறித்து பேசும் அர்ச்சகர் கண்ணன் ஏன் ஆகம விதிகளுக்கு முரணாக கோவிலை 12 மணி வரை திறந்திருந்தார். ஒரு அர்ச்சகர் பெண்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வதா? என அர்ச்சகர் கண்ணனுக்கு எதிராக புகார் அளித்தனர். அதனடிப்படையில் அர்ச்சகர் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கவுன்சிலர் மஞ்சுளா மூலம் தனக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் அர்ச்சகர் கண்ணன் ஞாயம் கேட்டு பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் தன்னை சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அர்ச்சகர் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது எப்போது அது நடைபெற்றது என்பதற்கான விவரங்கள் இல்லை. யாருக்காக இரவு 12 மணிவரை கோயிலை திறந்து வைத்திருந்தேன் என அதில் கூறவில்லை என்பதால் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் சஸ்பெண்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மனு தொடர்பாக ஜூன் 1-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கோவில் செயல் அலுவலர் மற்றும் திமுக கவுன்சிலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.