DMK Without any action against ADMK
அதிமுகவின் வலிமை மிக்க ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதா மறைந்து விட்டார். பொது செயலாளர் சசிகலா சிறை சென்று விட்டார். துணை பொது செயலாளர் தினகரன் போலீசால் கைது செய்யப்பட்டு, விசாரணையால் அலை கழிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, சசிகலா, தினகரன் வெளியேற்றத்திற்கும், தமது இருப்புக்கும் உத்திரவாதம் பெற்றுள்ளார் முதல்வர் எடப்பாடி.
மறுபக்கம், நமது அணி இணையாமல், நிபந்தனையை நிறைவேற்றாமல், அவர்கள் எப்படி தேர்தலை சந்திக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று மிரட்டி கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.

அதனால், சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக, என்னதான் மங்காத்தா ஆட்டம் ஆடினாலும், அதன் இருப்பை மக்களிடத்தில் அறிவித்து கொண்டே லைவாக இருக்கிறது.
ஆனால், அதிமுக மூன்றாக பிரிந்துள்ள நிலையில் உற்சாகமாக, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை அரங்கேற்ற வேண்டிய திமுகவோ, செயல் தலைவரின் மவுனத்தால் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது.
மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியபோது, ஸ்டாலின் அறிவித்த ரயில் மறியல் போராட்டம், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடயம் தெரியாமல் போய்விட்டது.
சபாநாயகர் தனபால் மீது, தேவை இல்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, தோல்வியை சந்தித்து, அதிமுகவின் வலிமையை, திமுகவின் மூலமே மீண்டும் பறைசாற்றினார் ஸ்டாலின்.
அண்மையில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில், தோழமை கட்சிகளுக்கு, போராட்ட விவரங்களை தெளிவாக சொல்லாதது போன்ற காரணங்களால், ஸ்டாலினின் செயல் பாடுகள் திருப்தியளிக்காமல் உள்ளதாகவே தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊடக பின்னணியோ, பொருளாதார பலமோ பெரிய அளவில் இல்லாத காலகட்டங்களில் கூட, கலைஞரின் வழிகாட்டுதல் திமுகவுக்கு மிகப்பெரிய பலத்தை தந்தது.
எம்.ஜி.ஆர் வலுவான தலைவராக திகழ்ந்து, பத்து வருடங்களுக்கு மேல், திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும், கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்டு கோப்பாக வைத்திருந்தார் கருணாநிதி.
ஆனால், அனைத்து பலத்தையும் வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், ஸ்டாலினால் எதுவும் சாதிக்க முடியாத நிலையை தொண்டர்களே விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளில் அரங்கேற்றிய திருவிளையாடல்களை, ஜெயலலிதா இல்லாத நிலையிலும் ஸ்டாலினால், அதிமுகவில் அரங்கேற்ற முடியவில்லையே என்று தொண்டர்கள் வருத்தப்படுகின்றனர்.
துரைமுருகன் போன்ற மூத்த அரசியல்வாதிகளை கூடவே வைத்திருக்கும் ஸ்டாலின், அவர்களுடன் விவாதிப்பாரா? அல்லது, நான் சொல்வதை கேட்டால் மட்டும் போதும் என்று உத்தரவிடுகிறாரா? என்றே தெரியவில்லை என்றும் தொண்டர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுக மூன்றாக பிரிந்திருக்கும் போதே, அரசியல் செய்ய தெரியாத ஸ்டாலின், அதிமுக அணிகள் இணைந்து விட்டால், அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் என்றே தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.
கருணாநிதியின் மகனாக, அவரது அரசியல் வாரிசாக இருக்கும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, கலைஞரின் சாதுர்யத்தில், செயல்பாடுகளில் 10 சதவிகிதம் கூட இல்லை என்றே தொண்டர்கள் குமுறுகின்றனர்.
