திமுகவை புரோமோட் செய்வதிலும் கொள்கை வகுப்பதிலும் முக்கிய பங்காற்றிய சுனில், விலகிவிட்டதாக கூறப்படும் நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பதில் நிபுணரான பிரசாந்த் கிஷோரை அந்த இடத்தில் நியமிக்க திமுக நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 
திமுகவில் கடந்த 5 ஆண்டுகளாக கட்சித் தலைமையை புரோமோட் செய்வதிலும் கொள்கைகள் வகுப்பதிலும் முக்கியமானவராக ஓஎம்ஜி நிறுவனத்தின் சுனில் என்பவர் விளங்கிவந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக முதலில் தேர்தல் வியூக மன்னரான பிரசாந்த் கிஷோரை அணுகியது. ஆனால், அவர் மறுத்துவிடவே, அவருடைய டீமிலிருந்து சுனிலை திமுக தலைமைக்கு மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அறிமுகம் செய்துவைத்தார். இதனையடுத்து மு.க. ஸ்டாலினை புரோமோட் செய்யும் பணியில் சுனில் நியமிக்கப்பட்டார்.

 
திமுகவின் பிரச்சார பாணி குறிப்பாக மு.க. ஸ்டாலினின் பிரசார உத்தி தொடங்கி திமுக ஐடி வின் வரை எல்லாமே இவருடைய ஏற்பாட்டின்பேரிலேயே நடைபெற்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெருங்கி வந்து தோல்வியடைந்தாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து திமுக தலைமை செயல்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெறும் வெற்றி பெற்றதால், சுனிலுக்கு கட்சியில் மவுசு கூடியது. ஆனால், வேலூர் தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைந்தது, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் தோல்விகளால், சுனில் மீதான நம்பிக்கையில் விரிசல் விழுந்துவிட்டதாகக் கூறப்பட்டது. தற்போது சுனில் திமுக பணிகளிலிருந்து விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


2011-க்குப் பிறகு திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என்று கட்சி தலைமை உறுதியாக நம்புகிறது. என்றாலும், அதற்கு முன்பாக சுனில் திமுக பணிகளிலிருந்து விலகி இருப்பது அக்கட்சி தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு காரணத்தாகவும் ஆட்சியை மீண்டும் இழந்துவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதில் உறுதியாக உள்ள நிலையில், அதை முறியடிக்கும் பணியும் திமுகவுக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதால், திமுக கவனமாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


எனவே சுனில் இருந்த இடத்தில் தேர்தல் வீயூக மன்னர் பிரசாந்த் கிஷோரை கொண்டுவர திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தாவுக்காக பிரசாந்த கிஷோர் பணியாற்றினார். இந்தத் தேர்தலில் மம்தா முழுமையாக வெற்றி பெற்றார். இதனால், கிஷோரை தங்கள் பக்கம் கொண்டுவந்து உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள  திமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன. 


ஏற்கனவே கிஷோரை தங்கள் கட்சிக்கு பணியாற்ற எடப்பாடி பழனிச்சாமி, கமல், ரஜினி எனப் பல தரப்புகளுகளும் அணுகினர். ஆனால், அந்த முயற்சிகள் ஏதுவும் கைகூடவில்லை. தற்போது திமுக மீண்டும் கிஷோரை அணுக முடிவு செய்துள்ள நிலையில், அவர் திமுக வலையில் சிக்குவாரா மாட்டாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.