இன்றைய நிலையில் தேர்தல் நடத்தினால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலையில் தேர்தல் நடத்தினால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதைத் நான் சொல்லவில்லை மத்திய மாநில அரசுகளின் உளவுப் பிரிவுகள் சொல்கிறது என அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் கொள்ளை ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது பெரும்பாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்ற விமர்சனத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதிமுக பாஜக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விடுகிறது, மக்கள் திமுகவுக்கு ஏன்தான் வாக்களித்தோம் என்று வருந்த தொடங்கிவிட்டனர் என்றும் அதிமுக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றிட அம்மா பேரவை செயலாளர் சார்பில் மாவட்ட செயலாளருக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது பேரவை செயலாளர்களுக்கான இந்த 2 நாள் பயிற்சி முகாமை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதில் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் ஆர். பி உதயகுமார் தலைமை தாங்கினார். கடந்த அதிமுக அரசின் சாதனைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மேடையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வாக்குறுதிகளை தருவார்கள் ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள் என்றோம், ஆனால் இப்போது திமுக அரசு செவிடர்களாக இருக்கிறது. தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தாலும் திமுக 10 இடங்களில் கூட வெற்றி பெறாது, இதை நான் சொல்லவில்லை மத்திய-மாநில அரசுகளின் உளவுத்துறை சொல்கிறது, நான் ஒன்றைச் சொல்லிக் கொடுக்கிறேன் திமுக அரசை ஆட்சியில் இருந்து கீழே இறக்கும் வரை நமது வேகம் குறைய கூடாது. ஒரு அரசியல் கட்சி என்றால் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறுவதற்கான கடமையை நாம் நேர்மையாக செய்ய வேண்டும், எதிர்வரும் தேர்தல் நமக்கான தேர்தல், அதற்காக நாம் அனைவரும் உழைத்திட வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.
