அடுத்த 25 ஆண்டுகளுக்கு  திமுக ஆட்சிதான். வேறு யாரும் ஆட்சி அமைக்க கனவுக்கூட காண முடியாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன் ‘வாழ்வும் பணியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பேசினார்.
 “திமுக மாணவர் அணியிலிருந்து எம்.எல்.ஏ., மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்து பொறுப்புகளை வகித்தவர் கண்ணப்பன். அவரின் உழைப்பையும் தியாகத்தையும் அறிய இந்த நூல்  உதவும்.  நெருக்கடி நிலையின்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டார்கள். பலர் மரணமடைந்தனர். அப்போது தலைவர் கலைஞர் வெளியே செல்ல கார் ஒட்ட ஆளில்லாமல் இருந்தார். அப்போது ‘நான் இருக்கிறேன் தலைவரே’ என்று காரை ஒட்டியவர் கண்ணப்பன். அதனால்தான் அவரை ‘காரோட்டி கண்ணப்பன்’ என்று ஒரு திருமண விழாவில் கலைஞர் பேசினார். அவரைப் போலவே பல தியாகங்களை கடந்துதான் திமுக இந்த நிலைக்கு வந்துள்ளது. 
தமிழ் மொழியையும் இனத்தையும் அளிக்க பல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனையைப் படைத்தது. பதவி ஏற்றபோது நம் எம்.பி.க்கள் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, அண்ணா வாழ்க என்று குரல் கொடுத்தார்கள். காவிரி, ஹைட்ரோ கார்பன் உள்பட தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை  நம் எம்.பி.க்கள் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழ்மொழிக்காகப் போராடும் இயக்கமாக திமுக விளங்கிவருகிறது.
வேலூர் தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து திமுக பெற்ற வெற்றி சாதாரணமான வெற்றி இல்லை. கடந்த சட்டபேரவைத் தேர்தலில் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 1971-ம் ஆண்டில் திமுக வெற்றி பெற்றது போல 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம். அதன் பிறகு அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான். வேறு யாரும் ஆட்சியமைக்க கனவுக்கூட காண முடியாது” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.