தமிழக பெண் அமைச்சர்களில் சீனியர் மனுஷி சரோஜா. சமூக நலத்துறை அமைச்சரான இவர் அடிக்கடி மக்களை கடுப்பாக்கும் சர்ச்சைகளில் சிக்குவதும், அதற்கு டெரராக ரியாக்ட் செய்வதும் வாடிக்கை. 

தன் சொந்த தொகுதியான ராசிபுரத்துக்கு எதையும் உருப்படியாக செய்து கொடுக்கவில்லை என்று மக்கள் இவர் மீது செம்ம கடுப்பில் இருக்கின்றனர் . அதனால் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக இவர் எங்கே வந்தாலும் முற்றுகை, கோஷம், தடை என்று பஞ்சாயத்து தொடர்கிறது. அந்தவகையில் சமீபத்தில் ஒரு நாள் இரவு ஏழு மணிவாக்கில் வடுகம் முனியப்பம்பாளையம் எனும் பகுதிக்கு நான்கு கார்களில் பிரசாரம் செய்ய வந்திருக்கிறார் சரோ. மக்கள் டென்ஷனாகி கூடிவிட்டனர். ‘எம்.எல்.ஏ.வாக்கி, அமைச்சருமாக்கி விட்டிருக்கோம் நாங்க. ஆனா அந்தம்மாவால தொகுதிக்கு அஞ்சு பைசாவுக்கு பிரயோசனமில்ல. 

இப்ப தேர்தலுக்கு மட்டும் பகுமானமா கார்ல வருதோ! எங்கே அந்தம்மா? இறங்க சொல்லு வெளியில,  நிறைய கேட்கணும்.’ என்று சவுண்டு விட்டபடியே முதல் காரை மக்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், போற பக்கமெல்லாம் தொடர்ந்து திட்டு விழுவதால் ஆக்சுவலாக முன்னெச்சரிக்கையாக மூணாவது காரில் இருந்திருக்கிறார் சரோஜா. மக்களின் ஆவேசத்தை கண் முன்னே பார்த்தவர், ‘ஆத்தாடி எம்புட்டு கோவத்துல இருக்காங்க. சிக்குனா திட்டித் தீர்த்து காதுல ரெத்தம் வர வெச்சுடுவாங்க, போல.’ என்றவர், தன் காரின் லைட்டை ஆஃப் செய்ய சொல்லிவிட்டு உள்ளேயே பதுங்கிக் கொண்டாராம். 

முதல் காரில் தான் இல்லை என்று தெரிந்தால் அடுத்தடுத்த காரை ஆய்வு செய்துவிட்டு, தன்னை பிடித்துக் கொள்வார்களோ!? என்று நடுநடுங்கிவிட்டாராம். இந்த நேரத்தில் மளமளவென வந்து சேர்ந்த காவல்துறையினர் கம்பை சுற்றி மக்களை விரட்டியிருக்கின்றனர். அப்போது ‘அந்தம்மாவை ஜெயிக்க வெச்சது நாங்கதானே! தொகுதிக்கு எதுவும் பண்ணலேன்னா கேக்குறது தப்பாய்யா? மேலே ஒரு அடி விழுந்துச்சுன்னா, சரோஜாவோட அரசியல் வாழ்க்கை காலி. அந்தம்மா இங்கே எங்கேயோதான் பதுங்கியிருக்குது.’ என்று சில ஆண்களும், பெண்களும் ஏகத்துக்கும் சவுண்டு விட்டிருக்கின்றனர். இது காருக்குள் இருட்டில் பதுங்கியிருந்த சரோஜாவின் காதில் விழ, நடுங்கிவிட்டாராம். 

அதன் பின் ஒரு வழியாக போலீஸ் சாந்தமாக மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க, அதன் பிறகு காரை கிளப்பிக் கொண்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார். பிரசாரம் செய்யவேயில்லை. இப்படி போகுமிடமெல்லாம் சரோஜாவை மக்கள் சகட்டுமேனிக்கு முற்றுகையிடுவதால் வேட்பாளர் காளியப்பன் நொந்து கிடக்கிறார்.

‘எங்கே இந்தம்மா மேலே இருக்கிற கோவத்துல, நம்மோட வெற்றியை முடிச்சுக் கட்டிடுவாங்களோ!’ என்பதே அவரது பயம். நாமக்கல் மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரும், முதல்வரின் வலது கரமுமான தங்கமணியின் காதுகளுக்கு இது போக, ‘தொடர்ந்து இப்படியே நடக்குதே! இது நம்ம வெற்றியை காவு வாங்கிட கூடாது.’ என்று கடுப்பாகி இருக்கிறாராம். இதற்கிடையில், ‘சொந்த தொகுதியில் நுழைய முடியாத பெண் அமைச்சருக்கு பதவி எதுக்கு? ராஜினாமா செய்யுங்க.’ என்று இந்த விவகாரத்தை பெரிதாக்கி பஞ்சாயத்தை கூட்டுகிறது நாமக்கல் மாவட்ட தி.மு.க.