’பணம் சம்பாதிக்கிறதுக்காக அரசியலுக்கு வரலை. உங்களுக்கு சேவை செய்யவே வருகிறேன். கூழும், கடிச்சுக்க மிளகாயும் இருந்தாலும்போதும், உங்களுக்காக உயிர் பிடித்து உழைப்பேன். பதவி என் கால் தூசுக்கு சமம்!’......இந்த அரதப்பழைய பொய் டயலாக்கை பல தலைவர்கள் வீதியெங்கும் பேசித் திரிவதை காலங்காலமாக கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த பரதேசித்தனமான டயலாக் இவர்களுக்காக சம்பாதித்துக் குவித்திருக்கும் செல்வங்களை நினைத்தால் தலீவர் போல் ‘அப்டியே தல சுத்திடும்’ உங்களுக்கு. 

தமிழகத்தின் வி.வி.ஐ.பி. எம்.பி. வேட்பாளர்கள் சிலரின் கொத்துக் கொத்தான சொத்து மதிப்பு இதோ உங்களின் கடுப்பான பார்வைக்கு. (ரெண்டு கண்டிஷன்கள்: இதெல்லாம் அவங்க அரசியலுக்கு வந்து சேர்த்த சொத்துக்கள்னு நாம சொல்லலை! அபிடவிட்டில் இருப்பது  மட்டுமே அவங்களோட உண்மையான, முழுமையான சொத்துன்னும் நாம சொல்லலை) தி.மு.க.வின் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலினின் தங்கை கனிமொழியின் கையிலிருக்கும் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு முப்பது கோடி ரூபாய். அவங்க அம்மா ராசாத்தி பெயரில் ஒன்று புள்ளி இருபத்து ஏழு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்குதாம். இவரை எதிர்த்து நிற்கும் தமிழிசையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் ரெண்டு கோடி. அவரது கணவரின் சொத்து மதிப்பும் ரெண்டு கோடி தானாம். 

ப.சிதம்பரத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு நாற்பத்து ஏழு கோடி ரூபாய். இவரை எதிர்த்துப் போட்டியிடும் ஹெச்.ராஜாவின் சொத்து மதிப்பு ஒன்று புள்ளி முப்பது கோடி மட்டுமே.  

தயாநிதி மாறனின் அசையும் சொத்தாக மூன்று புள்ளி அறுபத்து ஐந்து கோடி ரூபாயும், மனைவி ப்ரியா பெயரில் அசையும் சொத்தாக மூன்று புள்ளி ஒன்பது கோடி ரூபாயும் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் மாஜி அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி பெயரில் மூன்று புள்ளி தொண்ணூறு கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், பனிரெண்டு கோடியில் அசையா சொத்துக்களும், மனைவி ஜெயந்தி பெயரில் பதினொன்று புள்ளி ஐம்பது நான்கு கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழச்சி தங்கபாண்டியனின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக சுமார் ஐந்து புள்ளி இருபத்து நான்கு கோடி ரூபாயும், தன் பெயரில் வெறும் இருபத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பில் டி.வி.எஸ். எக்ஸெல் சூப்பர் மொபெட் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். இது போக ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ரொக்கம் இருக்குதாம். கேப்டனின் மச்சான் சுதீஷிடம், அசையும் சொத்துக்களாக ஆறு புள்ளி எண்பத்து ஓரு கோடி ரூபாயும், மனைவி பூர்ணஜோதி பெயரில் ஒன்பது புள்ளி எழுபது கோடி ரூபாயும் இருப்பதாக சொல்லியுள்ளார். அசையா சொத்துக்களாக ஒன்று புள்ளி நாற்பத்து மூன்று கோடியும், மனைவி பெயரில் ரெண்டு புள்ளி முப்பத்து நான்கு கோடியும் இருக்குதாம். 

காஸ்ட்லி வேட்பாளரான புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக் அறுபத்து எட்டு புள்ளி நாற்பத்து ரெண்டு கோடியும், மனைவி லலிதா லட்சுமி பெயரில் நாற்பத்து எட்டு புள்ளி பதினான்கு கோடி ரூபாயும் இருக்குதாம். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் பெயரில் சுமார் ஐம்பத்து எட்டு கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாக சொல்லியுள்ளார். பி.ஜே.பி. வேட்பாளரான நயினார் நாகேந்திரன் தன பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக தொன்னூற்று ஐந்து கோடி ரூபாய் இருபதாக சொல்லியுள்ளார். 

பொன்ராதாகிருஷ்ணன் தன்னிடமுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பாக வெறும் ஐம்பத்து ஏழு லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது என்றிருக்கிறார். இதே தொகுதியில் போட்டியிடும் வசந்தகுமாருக்கு அசையும், அசையா சொத்துக்களாக நானூற்று பதினான்கு கோடி ரூபாய் இருப்பதாக சொல்லியுள்ளார். புதியதமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக ஒரு கோடி ரூபாய் இருப்பதாக சொல்லியுள்ளார். பாரிவேந்தரோ தனது மற்றும் மனைவி பெயரில் நூற்று பத்து கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக சொல்லியுள்ளார்.

 

திருமாவளவன் தன் சொத்து மதிப்பாக ஒன்று புள்ளி இருபத்து ஏழு கோடி ரூபாயை காட்டியுள்ளார். திருநாவுக்கரசரின் பெயரில் சொந்த வீடு, கார் இல்லையாம். தனது மற்றும் மனைவி பெயரில் சேர்த்து.........மொத்த சொத்து மதிப்பு மூன்று கோடியே இருபத்து ஓரு லட்சத்து எண்பத்து ரெண்டாயிரத்து நூற்று எண்பத்து நான்கு ரூபாயை காட்டியுள்ளார். மேற்படி கணக்கு வழக்குகளை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் இஷ்டம். ஆனாலும் அழகிய வேட்பாளர் தமிழச்சியிடம் ஒரு எக்ஸெல் மொபட் மட்டுமே உள்ளதுதான் பெரிய வருத்தம்! அவ்வ்வ்வ்வ்........