கொங்கு மண்டலத்தில் கோயமுத்தூர் உள்ளிட்ட சில முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிடும் முடிவில் இருக்கிறாராம் ஸ்டாலின். குறிப்பாக கோவை, திருப்பூர் இவற்றை கம்யூனிஸ்டுகளுக்கு கொடுத்துவிடும் திட்டமிருக்கிறது என்கிறார்கள். 

இந்நிலையில், கம்யூனிஸ்டுகளிடம் கொடுத்தால் அவர்களுக்காக தாங்களேதான் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும், தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதனால் பல லட்சங்கள் செலவாகும், அப்படியே ஜெயிக்க வைத்தாலும் கூட அவர்களால் ஐந்து வருடங்களில் எந்த ஆதாயத்தையும் தாங்கள் அடைய முடியாது, அதனால் கம்யூனிஸ்டுகளே வேண்டாம்! என்று ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பிவிட்டனர் அப்பகுதி தி.மு.க.வினர். அக்கட்சிக்குள் இந்த விவகாரம் ஒரு பரபரப்பை உருவாக்கியிருக்கும் நிலையில், கம்யூனிஸ்டுகளின் காதுகளுக்கும் இந்த பிரச்னை எட்டியிருக்கிறது. 

இந்நிலையில் இதற்கு ‘கவுன்ட்டர்’ கொடுக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பாலகிருஷ்ணன் உதிர்த்திருக்கும் வார்த்தைகள் தி.மு.க.வின் கெத்தை ஏகத்துக்கும் உரசிப் பார்த்திருக்கின்றன. அப்படி என்னதான் சொல்லிவிட்டார் பாலகிருஷ்ணன்? “பணத்தை மையமாக வைத்து தேர்தல் நிகழ்வதென்பது ஜனநாயகத்துக்கான இழுக்கு. எங்க கட்சியின் அகில இந்திய அளவில் ஒரு கமிட்டி உட்கார்ந்து ‘தேர்தல் சீர்திருத்தம்’ சம்பந்தமா ஒரு ஐடியாலஜியை உருவாக்கியிருக்கிறோம். அதை தமிழகத்தில் விரைவில் பிரசாரம் பண்ண இருக்கிறோம். அதில் ‘பண ஆதிக்கமில்லாத தேர்தல்’ அப்படிங்கிறதும் ஒன்று. 

என்னைப் பொறுத்தவரையில் தேர்தலில் பணத்தினால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குதான் ஆதிக்கம் செலுத்திட முடியுமே தவிர, முழு அளவில் எதுவும் செய்யாது. பணத்தை மட்டுமே நம்பி கம்யூனிஸ்டுகள் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. பண பலத்தையும் தாண்டி, மக்கள் செல்வாக்கினால் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். அதே நம்பிக்கையோடுதான் வரும் தேர்தலையும் எதிர்கொள்வோம்.” என்று அசால்டாக அடித்து நொறுக்கியிருக்கிறார். 

பணத்தை வைத்து தேர்தலை எதிர்கொள்வது இழுக்கு’ என்று பொருள் பட பாலகிருஷ்ணன் பேசியிருப்பது, தி.மு.க.வுக்குள் திரிகொளுத்திப் போட்டுள்ளது. கூட்டணிக்கு கை கொடுக்கும் அதேவேளையில், தங்களை ஓவராய் சீண்டியிருக்கிறார் பாலகிருஷ்ணன் என்றே தி.மு.க.வினர் கருதுகின்றனர். எனவே ‘சீட் கேட்டு நம்மகிட்டதானே வரணும்! அப்ப வெச்சுக்கலாம் வேட்டு’ என்று கொதித்திருக்கிறார்களாம். கூட்டு சேர்றதுக்கு முன்னாடியே குழப்பமாய்யா?