ஏற்கனவே கொல்லைப்புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்த துரோகச் செயல். அனுதினமும் - அணுப்பொழுதும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆலவட்டம் சுற்றுவதையே தங்கள் ஒரே கடமையாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் அதன் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரும், ஏற்கனவே தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்துப் பாரதப் பண்பாடு எனப் பறைசாற்றித் திரியும் வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழ் உணர்வைக் கொச்சைப்படுத்தி புறந்தள்ளும் செயலன்றி வேறென்ன?
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இந்தி பிரசார சபா மூலம் இந்தி மொழி பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ் ‘வளர்ச்சித்துறை’ தமிழ் ‘அழிப்புத் துறை’யாகவே தற்போது மாறிவிட்டிருக்கும் அவலம் நேர்ந்து கொண்டிருக்கிறது. “மெல்லத் தமிழ் இனிச் சாகுமோ” என தமிழ்ச் சான்றோர்களும், அறிஞர்களும், ஆர்வலர்களும் நெஞ்சம் பதறும் வண்ணம் தமிழக தமிழ்வளர்ச்சித் துறையின் அண்மைக்கால செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக நேற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் வேல் கொண்டு பாய்ச்சிய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்தி மொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடக்கி வைத்து, அதற்காக 6 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

