கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான மாத்யூ சாமுவேலின் ஆவணப்படம் ஏற்படுத்திய அதிர்வு தமிழகத்தில் தற்போது வரை உள்ளது. ஆனால் அந்த அதிர்வை முதல் இரண்டு நாட்களாக பூகம்பமாக்கி வந்த தி.மு.க கடந்த இரண்டு நாட்களாக திடீரென அமைதியாகியுள்ளது. ஆவணப்படம் வெளியான அன்றே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

கொலை வழக்கில் முதலமைச்சர் பெயர் அடிபடுவதால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு மறுநாள் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கும் கொடநாடு விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார். உடனடியாக அன்று மாலையே தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவை களம் இறக்கினார் ஸ்டாலின்.

ஆ.ராசாவும் அடுத்தடுத்த கேள்விகளால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் கூட எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காத காரணத்தில் மறுநாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின். கொடநாடு கொலை வழக்கில் பெயர் அடிபடுவதால் உடனடியாக எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக ஆளுநரை சந்தித்து விசாரணை குழு அமைக்கவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த பிறகு இந்த விஷயத்தில் தி.மு.க மவுனம் காக்கிறது. அதிலும் முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக சயன், மனோஜ் கைது செய்யப்பட்டு அவர்களை சிறையில் அடைக்க மறுத்து நீதிமன்றம் வெளியே விட்டது. இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க பிரச்சனைய பெரிதாக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது வரை எந்த கருத்தும் வெளியிடாமல் உள்ளார். 

இதே போல் சயன் மற்றும் மனோஜ் விடுதலை குறித்து தி.மு.க பிரமுகர்களும் மவுனம் காக்கிறார்கள். இதற்கு காரணம் ஆளுநருடனான சந்திப்பின் போது எழுந்த சில கேள்விகள் தான் என்கிறார்கள். அதாவது முதலமைச்சருக்கு எதிராக மனு அளித்த போது அதனை உடனடியாக பன்வாரிலால் படித்து பார்த்துவிட்டு, ஒரு கொலை குற்றவாளியின் பேட்டியை அடிப்படையாக வைத்து எப்படி நாம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று தி.மு.க தரப்பை கேட்டதாக சொல்லப்படுகிறது.

அதற்கு ஒரு கொலை குற்றவாளி தற்போது கொலையில் தொடர்புடைய நபர் என்று ஒருவரை குறிப்பிடுகிறார் என்றால் அந்த நபரை அழைத்து வந்து மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ய சொல்லலாம் என்று ஆ.ராசா பதில் அளித்ததாகவும், அதற்கு ஏதேனும் திட்டவட்டமான ஆதாரம் இருந்தால் மட்டுமே இதற்கான வாய்ப்பு இருப்பதாக தான் கருதுவதாக ஆளுநர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் கான்ஸ்டிடியூசனல் போஸ்ட் என்று சொல்லப்படுகின்ற முதலமைச்சர் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறும் போது அதன் நோக்கம் மற்றும் பின்னணியை ஆராய வேண்டியது அவசியம் என்று ஆளுநர் ஒரு கொக்கியை போட்டதாகவும், இதன் பிறகு தி.மு.க தரப்பு அமைதியாக திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்த சென்ற மறுநாள் அ.தி.மு.க நிர்வாகிகளும் சென்று சந்தித்துள்ளனர். அதன் பிறகு பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை அளிக்கவில்லை என்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வரை ஸ்டாலினுக்கு பெற்றுத்தர முடியும் என்று பேட்டி அளித்தார். அந்த பேட்டிக்கு பிறகு தான் தி.மு.க சுத்தமாக அமைதியாகிவிட்டதாகவும், தி.மு.க தரப்பில் எம்.எல்.ஏ அன்பழகன் மட்டும் முனுசாமிக்கு பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் முனுசாமியின் நேரடியாக குற்றச்சாட்டுக்கு அன்பழகன் நேரடியாக பதில் சொல்லவில்லை. எனவே இந்த விவகாரத்தில் அவசரம் வேண்டாம் பொறுமையை கையாளலாம் என்று தி.மு.க முடிவெடுத்துள்ளதாகவும் அதனால் தான் அந்த கட்சியின் நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் பதுங்குவதாகவும் கூறப்படுகிறது.