திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த பல்லாவரம் 37-வது வட்டச் செயலாளர் எபினேசர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் திணறி வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. 

முக்கியமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி திமுக எம்எல்ஏக்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்நிலையில், பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அப்பகுதி திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.