விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. 

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை எனக் கூறி தொடர்ச்சியாக 13 மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர்.

13 மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக தமிழக அரசு விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. காரணம் இந்த திட்டத்தை நிறுத்திவைக்க கோரிக்கை விடுத்த விவாயிகள், உயர்நிலை மின்கோபுரங்களுக்கு பதிலாக பூமிக்கு அடியில் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். இதன்மூலம் விவசாய நிலத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு வராது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கைகளை நிராகரித்தது.

மின்கோபுரங்கள் அமைக்கப்பட்ட பின்பு, அதன் அருகே உள்ள நிலங்களில் நில உரிமையாளர்கள் எந்தவொரு விவசாய வேலைகளையும் செய்ய முடியாது என்பது விவசாயிகளின் மிக்பெரிய கவலையாக உள்ளது. மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் நிலத்தின் மதிப்பு குறைந்துபோகும் என்பது விவசாயிகள் மற்றொரு கவலை. தற்போது இருக்கும் நிலத்தின் மதிப்பில் பாதி கூட கோபுரம் அமைக்கப்பட்ட பின்பு இருக்காது என விவாயிகள் கருதுகின்றனர். இதனால் யாரும் நிலங்களை வாங்க முன் வர மாட்டார்கள் என்றும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

தென்னை மரங்களோ அல்லது வேறு ஏதேனும் மரங்களா மின்கோபுரத்திற்கு கீழே வளராது என விவசாயிகள் கருது கருதுகின்றனர். அத்துடன் தற்போது இருக்கும் வருமானம் பாதியளவில் கூட கோபுர அமைப்பிற்கு பின்னர் இருக்காது என விவாசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் சட்டப்பேரவையில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.