கரூர் மாவட்ட திமுக சார்பில் காணொலிக் காட்சி மூலம் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். “திமுக நிர்வாகிகளைப் பொறுத்தவரை கோடு போட்டுக் காட்டினாலே ரோடு போடக் கூடியவர்கள் என்பதற்கு உதாரணம்தான், கரூர் மாவட்டத்தில் நடைபெறக் கூடிய இந்த முப்பெரும் விழா. 530-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 50 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கக்கூடிய வகையில் மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறார் செந்தில் பாலாஜி.

 
கொரோனா காலம் என்பதால் கூட்டங்கள் நடத்த இயலாது என்பது ஒருபக்கம். என்றாலும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இத்தகைய கூட்டங்களை நாம் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். இது தொழில்நுட்ப யுகம். அதனாலதான், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் மூலமாக நமது கொள்கைகளைப் பரப்பக்கூடிய பணியை செய்துக் கொண்டு வருகிறோம். இப்போது காணொலிகள் மூலமாகவும் ஒன்றிணைந்து நாம் நமது பரப்புரையைச் செய்து வருகிறோம். நாளைக்கு வேறொரு தொழில்நுட்பம் வந்தால் அதனையும் பயன்படுத்திக் கொள்வோம்.
மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயச் சட்டங்களின் மிகமோசமான சூழலை எடுத்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளக்கினார்கள். இந்தியா விவசாய நாடு; இந்தியாவே கிராமங்களில்தான் வாழ்கிறது என்று சொல்கிறோம். ஆனால், ஒரு விவசாய நாடு போடுகிற சட்டமானது விவசாயிகளுக்கு விரோதமாக, வேளாண்மையைச் சிதைப்பதாக இருக்கும் என்று யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவசர அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. ஏனென்றால், இது மிக முக்கியமான பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. மத்திய அரசு கொண்டு வரும் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்துக்குத் தலையாட்டிய எடப்பாடி அரசைக் கண்டித்தும் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


நாங்கள் மட்டுமல்ல; பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் இந்தச் சட்டங்களை எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரே விலகி உள்ளார். இதை விட மிகப்பெரிய எதிர்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். தான் ஆதரிக்கிறது மட்டுமில்லாமல்; மற்றவர்களையும் ஆதரிக்கச் சொல்கிறார். “நானும் விவசாயி, நானும் விவசாயிதான்” என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்துகொள்ளவில்லை. விவசாயிகள் விரோதச் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா? பச்சைத் துண்டு போட்டு நடித்தவரின் பச்சைத் துரோகம் இது!
இந்தத் துரோகச் சட்டத்தை ஆதரித்ததால்தான், பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுகிறார். கொரோனாவை முதல்வர் பழனிசாமி கட்டுப்படுத்திவிட்டார் என்று சொல்லி இருக்கிறார். மாநில உரிமைகளுக்காக போராடாத தலையாட்டிப் பொம்மையாக பழனிசாமி இருப்பதால்தான் பிரதமர் மோடி அவரைப் பாராட்டுகிறார். மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியாகத்தான் இருக்கும். இதுமாதிரியான கொலை பாதக ஆட்சியை இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை; இனியும் பார்க்க முடியாது.
இதுவும் முழுமையான எண்ணிக்கை அல்ல. பரிசோதனை பண்ணாதே.... கொரோனா தொற்றை அதிக எண்ணிக்கையாகச் சொல்லாதே... மரணத்தைக் காட்டாதே... என்று முதல்வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அதுதான் இந்த அரசாங்கத்தில் நடக்கிறது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாத நிலை ஏற்பட்ட பிறகு, கொரோனாவால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்துவிட்டதாகக் கூறும் அடுத்த திருட்டுத்தனத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி ஓர் அரசாங்கத்தைத்தான் பிரமாதமான அரசு என்று கூறி பிரதமர் பாராட்டுகிறார்.
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஐந்து மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எடப்பாடி அரசு அதைச் செய்யவே இல்லை. ஊரடங்கு இருந்தால்தானே இழப்பீடு கேட்பீர்கள், இதோ ஊரடங்கையே தளர்த்திவிட்டோம் என்று சொல்லி அனைத்துக்கும் திறப்புவிழா நடத்திவிட்டார்கள். அனைத்தையும் திறந்து வைத்துவிட்டு, அதை ஊரடங்கு காலம் என்று சொல்வதை மாதிரிக் கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், கொரோனாவை வைத்து அடிக்கும் கொள்ளைகள் குறையவில்லை. கொரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கொரோனா பயன்படுகிறது.
இந்த அமைச்சரவையை ‘கிரிமினல் கேபினெட்’ என்று நான் குற்றம் சாட்டினேன். அத்தகைய குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிரக் குறையவில்லை. இன்றைக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது 3500 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகாரை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று உத்தரவு போட்டது. நேர்மையானவராக இருந்தால், யோக்கியராக இருந்தால், தனது கையில் கறைபடாதவராக இருந்தால் பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்?; புகாரை எதிர்கொண்டிருக்க வேண்டும். எந்த விசாரணைக்கும் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் மட்டும்தான் பழனிசாமி பதவியில் இருக்கிறார். வெளியில் இருக்கிறார். உச்சநீதிமன்றம் அந்தத் தடையை நீக்கினால் சி.பி.ஐ. வழக்கை பழனிசாமி எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் மகா யோக்கியரைப் போல ஊர் ஊராக போய்க்கொண்டு இருக்கிறார். கொடநாடு ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த படுகொலைகள், அதையொட்டி நடந்த தற்கொலை, அதைத் தொடர்ந்து நடந்த விபத்துகள், மர்ம மரணங்கள் ஆகியவை குறித்து இதுவரை பொதுவெளியில் முறையான விளக்கம் அவரால் சொல்லப்பட்டதா? அவரை பகிரங்கமாக பத்திரிகையாளர் மாத்யூ குற்றம் சாட்டினாரே? பதவியில் இருக்கும்போதே மர்மமான காரியங்கள் கொண்ட குற்றச்சாட்டுகள் வந்ததே? இதுதான் முதலமைச்சர் பதவிக்கு அழகா?


துணை முதலமைச்சர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக சார்பில் தரப்பட்டது. அவர்கள் அதனை எடுத்து முறையான விசாரணை செய்யவே இல்லை. அதன்பிறகு நீதிமன்றம் போனோம். நீதிமன்றம் இதன்மீது விசாரணை நடத்துங்கள் என்று உத்தரவு போட்டார்கள். ஆனால் விசாரணையை முடக்கி வைத்துள்ளார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான புகார்களை வரிசைப்படுத்தினால் அரைமணி நேரம் ஆகும். அதனால்தான் அவரை நான் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று சொல்லாமல் ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வேன். இந்த அமைச்சரவையில் அதிகம் சம்பாதித்த அமைச்சர்களில் முதலிடம் அவருக்குத்தான்.
பல்வேறு பினாமிகளின் மூலமாக டெண்டர்களை அவரே எடுத்து அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டு இருக்கிறார். நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு என்று தங்கமணி மீது புகார் கொடுத்து இருக்கிறோம். கொரோனாவை வைத்து ஊழல் செய்ய முடியும் என்பதை இந்தியாவுக்குக் காட்டியவர் அமைச்சர் விஜயபாஸ்கர். மருந்துகள் வாங்கியதில் ஊழல், கிட்ஸ் வாங்கியதில் ஊழல், தூய்மைப் பொருள்கள் வாங்கியதில் ஊழல் என்று மொத்தமும் ஊழல் மயம். இன்னும் ஆறு மாதம் கூட கொரோனா நீடித்தால் சந்தோஷப்படும் மனிதராக ஒருவரைச் சொல்லவேண்டுமானால் அது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கராகத்தான் இருப்பார். குட்கா வியாபாரிகளிடம் கமிஷன் வாங்கியதால் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியவர் அவர். ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாயைப் பட்டுவாடா செய்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள் மீது புகார்கள் இருக்கிறது. இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் கொடுத்த புகார்களே மலையளவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையிலும் டெல்லி சி.பி.ஐ-யிலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இருக்கின்றன.
இப்படிப்பட்ட கேபினெட்டை ‘கிரிமினல் கேபினெட்’ என்று சொல்லாமல் என்ன சொல்வது? இந்த கிரிமினல் கேபினெட்டை, கோட்டையை விட்டு துரத்தி சிறையில் வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்! இந்த ஆட்சியில் மொத்த மக்களும் நிம்மதியாக இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நெசவாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தொழிலாளிகள் வேலைகளை இழக்கிறார்கள். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. சிறு, குறு தொழில்கள் மொத்தமாக நசிந்துவிட்டன. மத்திய தர வர்க்கம் விரக்தியாகி விட்டது. தொழில் அதிபர்களுக்கும் தொழில் முன்னேற்றம் இல்லை. விலைவாசி அதிகமாகி விட்டது. எல்லாக் கட்டணங்களும் உயர்ந்துவிட்டது. சலுகைகள், மானியங்களை துண்டித்துவிட்டார்கள். பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துவிட்டது. மத்திய அரசு எல்லா வகையிலும் மக்களுக்கு சலுகைகளை தருவது இல்லை. மத்திய அரசுக்கு மக்களைப் பற்றி அக்கறையே இல்லை. மொத்தத்தில் அவர்கள், அவர்களுக்காக ஆண்டு கொள்கிறார்கள். அவர்கள், மக்களுக்காக ஆளவில்லை!
மக்களுக்காக, மக்களைப் பற்றி கவலைப்படக் கூடிய, மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய, மக்களது எதிர்பார்ப்பை செய்து கொடுக்கக் கூடிய ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். அதனை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாம் அதற்கான பணிகளைத் தொடங்குவோம்.” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.