கொரோனா காலத்திலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் என பெட்ரோலிய பொருட்களுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்வுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று நோய் காரணமாக உலகமே லாக்டவுன்களால் முடங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது. இருந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இவற்றின் விலையைக் குறைக்கக்கோரி எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தபோதும், மத்திய அரசு அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. 
இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு திடீரென உயர்த்தியது. பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரியை 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் வரியை 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தியது. தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி உயர்வால், நள்ளிரவு முதல் இவற்றின் விலை உயர்வு அமலுக்கு வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்ந்தது.


இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா காலத்திலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா? இதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்! எனவே வரி உயர்வை திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.