சமூக வலைத்தளங்களில் திமுகவைப்பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்து வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அணுகுமுறையைக் குறை கூறியும் டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். 
காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறையையும் கட்சித் தலைவர் ஸ்டாலினையும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் மாரிதாஸ் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவை தடை செய்ய வேண்டும் என்றும், 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் திமுகவின் நிலைப்பாடு ஹிஸ்புதின், லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாரிதாஸ் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவருடைய பேச்சை பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். இந்நிலையில் திமுக தலைமை நிலைய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘மாரிதாஸ் என்பவர் சமூகவலைத்தளங்களில் திமுகவைப் பற்றி அவதூறு பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.