சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூரில் விசிக சின்னமான பானையை அதிமுகவினர் உடைத்ததால் வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்டு 20க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன.

சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து அதிமுகவில் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பியில் அதிமுகவினர் திருமாவின் சின்னமான பானையை உடைத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாரப்பட்டன.

 

ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியனின் கார் உடைக்கப்பட்டது. கஸ்பா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட பாலசுப்ரமணியன் வந்தபோது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு போலீஸார் தடியடி நடத்தினர். அங்கு திமுக சார்பில் விஸ்வநாதனும், அதிமுக சார்பில் ஜோதி ராமலிங்க ராஜாவும் களமிறங்கி உள்ளனர். 

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு திமுக வேட்பாளர் காத்தவராயனை எதிர்த்து அதிமுக சார்பில் மூர்த்தி களமிறங்கி உள்ளார்.  தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் கல்லூர் வாக்குச்சாவடி அருகே பாமக- திமுகவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதிமுக- திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது இதில் ரஞ்சித், அரவிந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர். 

சென்னை பெரம்பூரில் உள்ளது பெரியார் நகர் வாக்குச் சாவடி. இங்கு பூத் முகவராக உள்ள நாம் தமிழர் கட்சியினர் உணவு கொடுப்பதற்காக உள்ளே சென்றார். அப்போது துணை ராணுவத்தினர் அவரை தடுத்தனர். எனினும் அவர் உணவு கொடுப்பதற்காக செல்கிறேன் என கூறிவிட்டு சென்றார். அப்போது அந்த முகவர் மீது துணை ராணுவ காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த முகவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது.