DMK pays proper homage to N Periyasami death
கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வாக்கு சேகரிப்பு இயந்திரங்களாகவே பார்க்கும் தலைமைகளுக்கு மத்தியில் தி.மு.க.வின் உருக்கம் நெகிழ வைக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர் என்.பெரியசாமி. அடிமட்டத்திலிருந்து கட்சியால் வளர்ந்தவர், கட்சியை வளர்த்தவர். தூத்துக்குடியின் மார்கெட் ஏரியாவில் சைக்கிள்களுக்கு டோக்கன் போட்டதுதான் இவரது துவக்க கால பிஸ்னஸ் என்பார்கள்.
இயல்பிலேயே தடாலடி பேர்வழியான இவர் கருணாநிதி மீது வைத்திருந்த கண் மண் தெரியாத ஈர்ப்பினால் தி.மு.க.வில் இணைந்தார். கோர்வையாகவோ, இலக்கிய நயமாகவோ பேச தெரியாது. ஆனால் தடாலடியாக மனதில் நினைத்ததை பேசிவிட்டு போகக்கூடியவர். மெதுவாக ஒவ்வொரு கட்டங்களாக கட்சியில் வளர்ந்தார்.

அந்த காலத்தில் கருணாநிதிக்கு சில மிரட்டல்கள் இருந்தன. அப்போது அவர் எந்த மாவட்டத்தில் இருக்கிறாரோ அந்த மாவட்டத்தை சேர்ந்த தீரமான நிர்வாகிகள் ஒரு டீமாக மாறி கருணாநிதிக்கான பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.
அந்த வகையில் கலைஞர் தூத்துக்குடி வந்துவிட்டால் அவர் மீது தூசி துரும்பு பட்டுடாதவாறு காவல் பணியில் துடியாய் இருப்பார் பெரியசாமி. அதனால்தான் அவரை தனது முரட்டு பக்தன் என்பார் கலைஞர். இறுதி வரை அந்த அடைமொழியை சொல்லித்தான் தன்னை ஒவ்வொரு கூட்டத்திலும் அறிமுகம் செய்து கொள்வார் பெரியசாமி.

’என் ஆருயிர் தம்பி வை.கோபாலசாமி’ என்று கலைஞரால் வாஞ்சையாக அழைக்கப்பட்ட வைகோ அப்போது தி.மு.க.வில்தான் இருந்தார். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியானது தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள திருநெல்வேலி மாவட்டமென்பதால் அடிக்கடி தூத்துக்குடி வருவார் வைகோ. அந்த வகையில் பெரியசாமி அவரது அன்பிற்கு பாத்திரமானார். வைகோ மூலமாகவும் கட்சியில் வளர்ந்த பெரியசாமி 1987க்கு பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவே உயர்ந்தார்.
தொடக்க பள்ளி படிப்பை தாண்டவில்லை, பணக்கார குடும்ப பின்னணியில்லை. ஆனாலும் விசுவாசத்தின் மூலம் கட்சியில் உயர்ந்தவர் பெரியசாமி. எம்.எல்.ஏ.வாகும் வாய்ப்பை பெற்றிருந்தாலும் கூட அமைச்சராகவில்லையே என்கிற ஆதங்கம் அவருக்கு எப்பவும் உண்டு.

பெரியசாமி துத்துக்குடியில் கட்சியையும் வளர்த்தார், அதன் மூலம் தானும் வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறார். அவரது மகள் கீதாஜீவன் கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராயிருந்தவர், தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர்.
தென்மாவட்ட தி.மு.க.வில் அழகிரி அணி என்ற நிலை உருவான போது, ஸ்டாலின் தன் ஆதரவாளராக கண்ணை மூடிக்கொண்டு போட்ட லிஸ்டில் பெரியசாமியும் உண்டு. அந்த நம்பிக்கையை தன் விசுவாசத்தின் மூலம் உறுதி செய்தார் பெரியசாமி.

உடல் சுகவீனத்தால் சென்னையில் அட்மிட் செய்யப்பட்டிருந்த பெரியசாமி இறந்துவிட்டார். இன்று அவரது உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார் அவருக்கு பின் துர்கா ஸ்டாலின், செல்வி என்று கருணாநிதியின் குடும்ப பெண்களே வந்து நின்று அஞ்சலி செலுத்தியது ஒரு உண்மை தொண்டனுக்கு கட்சி தலைமை கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது தமிழக அரசியல் அரங்கில். ‘இதுதான்யா தி.மு.க.வுடைய தனி குணம்.’ என்று நெகிழ்கிறார்கள் விமர்சகர்கள்.

தான் தி.மு.க.வில் வளர்ந்த காலத்தில் தனக்கு பல வகையில் கைகொடுத்த வைகோவுடன் பெரியசாமியும் பிரிந்து ம.தி.மு.க. சென்றுவிடுவார் என்று பலர் கூறினர். ஆனால் கலைஞரோ ‘என் முரட்டு பக்தன் என்னுடன் தான் இருப்பான்.’ என்று நம்பிக்கை காட்டினார். பெரியசாமியின் முரட்டு விசுவாசமானது அந்த நம்பிக்கைக்கு துளி பிசகாமல் நியாயம் செய்தது.
