தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒருவாரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி மருத்துவமனையில் 4–வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் உடல் நலம் குறித்து விசாரிக்க, முதல்வர் பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை வருகை தந்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து நலம் விசாரித்த அவர், பின் தற்போது திமுக தலைவர் உடல்நலம் சீராக உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் காவேரி மருத்துவமனையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்றும், சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டதால். திமுக தொண்டர் வருகை அதிகரித்தது. 

இதனால் திமுக தொண்டர்கள், கருணாநிதி உடல் நலம் பெற்று மீண்டுவர வேண்டும் என்று, காவேரி மருத்துவமனை முன்பு மொட்டையடித்தும் திருஷ்டி பூசணிக்காய்கள் உடைத்தும் வேண்டுதல் நடத்தி வருகிறார்கள்.

இதே போல் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா நீர் சத்து குறைப்பாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அப்பலோ மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் பலர் துர்க்கை அம்மன் சிலை அமைத்து அதற்கு பூஜைகள் செய்து, திருஷ்டி பூசணிக்காய்கள் உடைத்தனர். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அதிமுக தொண்டர்கள் மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வழிபாடுகள் நடத்தினர்.

இந்நிலையில் இதே பாணியை கையாளும் விதத்தில், திமுக தொண்டர்களும், கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என்கிற வேண்டுதலோடு காவேரி மருத்துவமனை முன்பு, மொட்டை அடித்தும் பூசணிக்காய் மேல் பெரிய கற்பூரத்தை வைத்து ஏற்றி திருஷ்டி எடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அதே போல் மருத்துவனை முன்பு கூடியுள்ள பெண் தொண்டர்கள் பலர், "தங்கள் உயிரை எடுத்துக்கொண்டு எங்கள் தலைவரின் உயிரை கொடுத்து விடு கதறி அழுது வருகிறார்கள். ஆண் தொண்டர்கள் பலர் "தலைவா எழுந்து வா' என முழக்கம் போட்டு வரும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.