அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட்டு புகார் அளிக்க வசதியாக தமிழகத்தில் 7 மண்டலங்களில் 59 வழக்கறிஞர்களின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்ட பிறகு திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக அதிமுகவினர் மீது ஊழல் புகார்களை சமூக ஊடகங்களில் கூறிய திமுகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கியமாக இயற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில், ‘எடப்பாடி அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் கட்சித் தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும், அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது’ என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி தற்போது திமுக தலைமை, தமிழகத்தை 7 மண்டலங்களாகப் பிரித்து 59 வழக்கறிஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக கட்சி பத்திரிகையான முரசொலியில், “அதிமுக, பாஜக அரசுகளால், திமுகவினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவும் அதிமுகவினரின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து, அவற்றின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்த வழக்கறிஞர்கள் குழு செயல்படும்” என்று திமுக அறிவித்துள்ளது. மேலும் புகார்களைச் சேகரிக்க வசதியாக திமுக சட்டத் துறையின் மின்னஞ்சல் முகவரியையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.