கடந்த 2018-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இந்த விழாவில்தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
டெல்லியில் திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது குறித்து திமுக தரப்பில் தகவலகள் வெளியாகியுள்ளன,
டெல்லியில் திமுக அலுவலகம்
நாட்டின் தலைநகர் டெல்லியில் திமுக கட்சி அலுவலகத்தை எழுப்பியுள்ளது. இந்த அலுவலகத்தை கடந்த ஜனவரியில் திறக்க திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால், அப்போது கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகப் பரவியதால், திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி திமுக அலுவலகம் ஏப்ரல் 2 அன்று திறக்கப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது திடீரென பாஜக முன்னாள் தேசிய செயலாளரும் மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு அழைப்பு
இதேபோல தொழில் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பிதழ் வழங்கியுள்ளார். அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் பேசி வரும் சூழலில், டெல்லியில் நடைபெறும் கட்சி அலுவலக திறப்பு விழாவை திமுக அதற்காகப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இந்த விழாவில்தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அன்று கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக அளவில் அதிமுக - பாஜக தலைவர்கள் கூட விழாவுக்கு அழைக்கப்படவில்லை.
அமித் ஷாவுக்கு அழைப்பு

ஆனால், தற்போது திமுக கட்சி அலுவலகத் திறப்பு விழாவுக்கு பாஜக மேலிட தலைவர்களுக்கும் திமுக அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த நிலையில், பாஜகவுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளது அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள், மம்தா பானர்ஜி உள்பட வட இந்திய தலைவர்களுக்கும் திமுக தரப்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்தது போல, வேறு கட்சித் தலைவர்கள் கட்சி அலுவலகத்தை திறக்கவில்லை. அலுவலகத்தை ஸ்டாலின்தான் திறந்து வைக்க உள்ளார். எனவேதான், பிற கட்சிகளைச் சேர்ந்த எல்லா தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் வரவேற்போம் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
