நித்தி தலைவா நீங்க வேற...வேற லெவல் தலைவா.. காமெடி கன்டென்ட் கொடுக்குறதுல... சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க என தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் கிண்டல் செய்துள்ளார். 

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தாவை கர்நாடக உயர்நீதிமன்றம், இந்திய வெளியுறவுத்துறை தீவிரமாக தேடி வருகின்றது. அவர், இந்தியாவை விட்டு வெளியேறி தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

இதனிடையே, உலகில் எங்கோ இருந்தபடி நித்யானந்தா தினசரி உபதேசங்களை வாரி வழங்கி வீடியோவை வெளியிட்டு வருகிறார். இதற்கு நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என அதையும் தனக்கு சாதகமாக்கி பேசி வருகிறார் நித்யானந்தா. மீனாச்சி மீனாச்சி...என்னாச்சு என்னாச்சு" என்ற வீடியோ மற்றும் நான்கு பேர் நான்கு விதமாய் பேசினால் அது நாடு. நான்கு பேர் நான்கு விதமாய் என்னைப்பற்றி பேசினால் அது தமிழ்நாடு" என்று சமீபத்தில் அவர் பேசிய வீடியோவும் வெளியானது. 

இந்நிலையில், குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சீமான் குடியுரிமை பட்டியலில் இருந்து என் பெயர் நீக்கப்பட்டால் எனக்கு கவலை இல்லை. இருக்கவே இருக்கார் கைலாசா அதிபர் நித்யானந்தா. அவர் வசம் ஒரு தீவே உள்ளது. நான் அங்கு சென்று விடுவேன் என கேலியாக பேசி போராட்டம் நடத்திய தொண்டர்களை சிரிக்க வைத்தார். இதில் சீமான் கைலாசா என்று சொன்ன உடனே சிரிப்பு சத்தம் ஒட்டுமொத்த தம்பிகளை ஆரவாரப்படுத்திவிட்டது. 

இந்நிலையில், நித்யானந்தா வீடியோ ஒன்றை தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கலாய்த்திருக்கிறார். அந்த பதிவில் நித்தி தலைவா நீங்க வேற...வேற லெவல் தலைவா.. காமெடி கன்டென்ட் கொடுக்குறதுல... சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.