தமிழினத் துரோகி யார் என்பது குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸுக்கு தருமபுரி திமுக எம்பி. செந்தில்குமார் பதில் அளித்துள்ளார். 
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக நடத்திய போராட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக, பாமக துரோகம் செய்துவிட்டது” என்று விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “ஈழத் தமிழர் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல உள்ளது” என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வீடியோ பதிவில், மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்திருந்தார்.


 “ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி திமுகதான். தமிழின விரோதி யார் என்பது குறித்து என்னுடன் விவாதிக்க மு.க. ஸ்டாலின் தயாரா?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அன்புமணியின் இந்தக் கேள்விக்கு தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “நான் விவாதிக்க தயார்.  நீங்கள் சொல்லும் இடத்தில், சொல்லும் தேதியில், சொல்லும் நேரத்தில் உங்களுடன் விவாதிக்க தயார். பொதுவெளியில் சவால்விடுகிறேன். ஆரோக்கியமான விவாதத்துக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்” என்று செந்தில்குமார் பதிவிட்டுள்ளார்.