மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதும் அவருடைய சிலையை நாடாளுமன்றத்திலும் வைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
 நாடாளுமன்றம் மக்களவையில் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் பேசினார். அப்போது அவர் பலவேறு விவகாரங்கள், தமிழக பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார். “பெண்கள், குழந்தைகள், ஏழைகள், நலிவுற்ற சமூகத்தினருக்கு நாடாளுமன்றம் என்ன செய்யப்போகிறது என நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அரசோ ஜாலியன்வாலா பாக் நினைவு அறக்கட்டளை அமைப்பில் காங்கிரஸ் தலைவருக்கு அளிக்கும் பிரதிநிதித்துவத்தை ரத்து செய்ய மசோதாவை அரசு கொண்டு வருகிறது. நாட்டுக்கு இதுதான் முக்கியமா? இதற்காகத்தான் இந்தக் கூட்டத் தொடரை நீட்டித்தீர்களா? உங்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா? அரசிடம் பெருந்தன்மையே இல்லை.


ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு ஜெனரல் டயர் மீது விசாரணை நடைபெற்றது. ஆனால், தமிழகத்தில் தூத்துக்குடியில் ஓர் இளம்பெண் உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உருப்படியாக ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.  நாடாளுமன்ற வளாகத்தில், கருணாநிதியின் முழு உருவச்சிலையை வைக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.” என்று தெரிவித்தார்.