ஆர்கே நகர் இடைத் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. இதற்காக அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதில், அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டிடிவி.தினகரன், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்ததாக புகார்கள் எழுந்தன. மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பலகோடி பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சென்றது.

இதைதொடர்ந்து கடந்த 7ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 22 மணிநேரம் நடத்திய இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், அமைச்சரின் வீட்டில் சிக்கிய ஆவணங்களில் ரூ.89 கோடி வரை வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திருச்சி சிவா எம்பி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று மும்பையில், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.

அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை வளையத்துக்கு உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதிகாரிகள் கைப்பற்றி ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 7 அமைச்சர்கள் பெயர் உள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடி கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களை பதுக்கி வைத்துள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

 

கவர்னர் வித்யாசாகர் ராவ், 17ம் தேதி சென்னை வருகிறார். அதன்பிறகு, தமிழக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், இன்று மாலை சென்னை வரும் திமுகவினர், கவர்னரிடம் அவர்களின் கோரிக்கைகள் கொடுக்கப்பட்டதா, அதற்கான நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரிவிப்பார்கள்.