வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இன்று தமிழகம் திகழ்வதற்கு கரை வேட்டி  கட்டியவர்கள் தான் காரணம் என நடிகர் கமல்ஹாசனுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

கரைவேட்டி கட்டியவர்களால்தான் தமிழகம் கறைபடித்துள்ளது என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு அதிமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் பதிலடி கொடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான அலுவலக திறப்பு விழா இன்று களக்காட்டில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்த  கனிமொழி, பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

 

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ்கட்சி வேட்பாளர் திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெறுவார் என்றார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் கரைவேட்டி கட்டியவர்களால்தான்  தமிழகம் கறைபட்டுள்ளது என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கூறியிருப்பது அரசியல் புரிதல் இல்லாதது என்றார். சர்வதேச நாடுகளுக்கு  இணையாக இன்று தமிழகம் உயர்ந்துள்ளதற்கு காரணம் கரை வேட்டி கட்டிய திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் எனக் கூறினார்.  கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள தமிழர்களின் தொன்மையை பாரதத்தின் தொன்மை என்று கூறி தமிழர்களின் வரலாற்றை திசை திருப்ப பார்க்கும் அதிமுகவுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கனிமொழி சாடினார்.