நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் கூட்டி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் இப்போது என்ன ஆனது.? அது எங்க இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல முடியுமா என  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆ. ராசா இவ்வாறு பேசியுள்ளார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை ஏன் என்று எதிர்த்துக் கேள்வி கேட்ககூட திராணி இல்லாத அரசாக  தமிழக அரசு உள்ளது என தன் பேச்சின் துவக்கத்திலேயே தமிழக அரசை தாக்கினார்.  தொடர்ந்து பேசிய அவர், அனைவருக்கும் இந்தி கட்டாயம் என கூறி மீண்டும் இந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தபோது, திமுக மட்டும்தான் அதனை எதிர்த்து  குரல் கொடுத்தது என்றார்.  ஆனால் தமிழகத்தை ஆளுகின்ற எடப்பாடி தலைமையிலான அரசு மத்திய அரசை ஏன் என்று கூட ஒரு கேள்வி கேட்கவில்லை. இவர்களால்  மத்திய அரசின் அறிவிப்புகளை வேடிக்கை மட்டும்தான்  பார்க்க முடியும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்றும் விமர்சித்தார்.

    

அது மட்டுமல்ல தமிழகத்தின்  உரிமைகளை பறிக்கின்ற நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன்,  புதிய கல்விக் கொள்கை என எந்த திட்டத்தையும் எதிர்க்க முடியாமல் பாஜகவின் அடிமையாக  அதிமுக அரசு உள்ளது என்றார். மாணவர்கள் மற்றும் பொற்றோர்களிடம் பலத்த எதிர்ப்பு எழுந்ததின் காரணமாக,  நீட் தேர்வில் தமிழகத்திற்கு உடன்பாடு இல்லை என அதிமுக அரசு அப்போது முடிவு செய்தது. பின்னர்  அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட்டி ஒருமனதாக நீட் தேர்வுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றிய அரசு, அதன் நகலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் அந்த தீர்மானத்தின் நகல் இதுவரை எங்கிருக்கிறது அது என்ன ஆனது என்று எந்த தகவலும் இல்லை என சாடினார்.

 

இது குறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டி.கே ரங்கராஜன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தீர்மானத்தின்  நகல் எங்கிருக்கிறது என்ற விவரத்தை தருமாறு கோரியிருந்தார், ஆனால் அந்த நகல் இப்போது எங்கே இருக்கிறது என்று தகவல் ஏதும் இல்லை என பதில் வந்துள்ளது.  அது குடியரசுத் தலைவரின் மேசையிலும் இல்லை என தகவல் வருகிறது, இதனால் நான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்கிறேன், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் கடிதம் இப்போது எங்கே இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா.? என்று முதலமைச்சரை கேள்வி எழுப்பிய ஆ. ராசா.  இந்த கடிதத்தை பற்றி இவ்வளவு ரகசியம் காக்கும் அளவிற்கு அது என்ன  தீர்மான கடிதமா, அல்லது நீங்கள் எழுதிய லவ் லெட்டரா என  முதலமைச்சரை  கடுமையாக விமர்சித்துள்ளார்.