‘கலெக்‌ஷனில்’ மட்டுமே குறியாக இருக்கும் அமைச்சர் தங்கமணி மின்வாரியக் கட்டணத்தில் இருக்கும் படிமுறையை முறைப்படி கணக்கிட்டு இருந்திருந்தால் மின் கட்டணம் ஏழை எளிய மக்களுக்கு வெகுவாக குறைந்திருக்கும் என்று திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்திருக்கிறார்.


மின் கட்டண விவகாரத்தில் அமைச்சர் தங்கமணிக்கும் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கும் இடையே அறிக்கை போர் நடந்துவருகிறது. ஏற்கனவே மின் கட்டணத்தில் பகல் கொள்ளை அடிக்கிறார்கள் என்று திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் தங்கமணி தங்கள் இருப்பைக் காட்டிகொள்ள இதுபோன்ற அவப்பழியை அரசு மீது திமுக சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்தார். இந்நிலையில் அந்த அறிக்கைக்கு பதிலடியாக செந்தில் பாலாஜி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், “மின் கட்டணம் என்ற பெயரில் மக்கள் பணத்தையும், டாஸ்மாக் என்ற பெயரில் மனித உயிர்களையும் உறிஞ்சும் குமாரபாளையத்து ‘அட்டைப்பூச்சி தங்கமணி’, கேள்விகளைக் கேட்ட எனக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் தலைவர் ஸ்டாலினை சீண்டுகிறார். எங்கள் தலைவரைப் பற்றிப் பேசுகிற தகுதியும் யோக்கியதையும் உமக்கு இருக்கிறதா?
வடநாட்டு ராஜாக்களின் அடிமைகளாக, அவர்கள் வீசும் ரொட்டித்துண்டுகளுக்காக வாலாட்டும் சுயமரியாதையற்றவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தையும், விழுப்புரத்தில் சிறுமியை எரித்துக் கொன்றதையும் மறந்துவிட்டுப் பேசலாமா? கோடிக்கணக்கான தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்படும் மின்கட்டணப் பிரச்சினையில் கேள்வி கேட்டால் மடைமாற்றம் செய்வதாகச் சொல்வதுதான் அமைச்சருக்கு அழகா?
மதிமுகவில் நான் இருந்தேன் என்கிறார் ‘பாட்டில் பிசினஸ் பாடிசோடா'. ‘விடிந்தால் போச்சு’ என நீங்கள் விட்டோந்தியாக பேசும் உங்கள் பேச்சையே, ‘தெளிவான’ பிறகு நீங்களே நிரூபிக்க தயாரா? அப்படி மதிமுகவில் நான் இருந்தேன் என்று நிரூபிக்க முடியவில்லை என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்? மக்கள் மன்றத்தில் அவமானப்படுகிறவர்கள் நீதிமன்றத்திலும் அவமானப்பட நேரிடும். 
மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டத்தைச் சார்ந்த குடும்பம் ஒன்றினை ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றுப் பதமாக’ சுட்டிக் காட்டியிருந்தேன். மின்சாரக் கட்டணம் எப்பொழுதைக் காட்டிலும் அதிகம் என பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கதறுவதையும், கணக்கீட்டு முறைகளில் நடைபெற்றிருக்கும் தவறுகளையும், மின் கட்டணம் கட்டுவதற்கு வருமானமில்லை, அதனால் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று வருந்தும் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோரையும் ஆதாரத்துடன் அழைத்து முன்னால் நிறுத்த முடியும். அவர்களுக்காக குரல் எழுப்பினால் ஜன்னி கண்டவரைப் போல பிதற்றுகிறார் சாராய அமைச்சர் தங்கமணி. 
கரூர் மாவட்டத்தில் டிசம்பர் மாத மின் கட்டணமாய் ரூபாய் 270/- செலுத்திய எளிய குடும்பம், ஜனவரி, பிப்ரவரி மாதம் வெறும் 80 யூனிட் மட்டுமே பயன்படுத்தி, கட்டணம் ஏதும் வராத அளவிற்கு சிக்கனமாய் பயன்படுத்திய குடும்பத்திற்கும் இந்த மாதம் பில் தொகையாக ரூபாய் 2,030/- வந்திருக்கிறது. இந்த அரசு மட்டும், பெட்டைக்கோழி இல்லாமல் முட்டை எடுப்பது எப்படி? அன்றாடங்காய்ச்சிகள் முதல் ஆயிரக்கணக்கான யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் சிறு, குறு தொழிற்சாலைகள் வரை, இப்படி லட்சக்கணக்கானவர்களுக்கு எவ்வளவு வந்திருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ‘கலெக்‌ஷனில்’ மட்டுமே குறியாக இருக்கும் அமைச்சர் தங்கமணி மின்வாரியக் கட்டணத்தில் இருக்கும் படிமுறையை (Slab) முறைப்படி கணக்கிட்டு இருந்திருந்தால் மின் கட்டணம் ஏழை எளிய மக்களுக்கு வெகுவாக குறைந்திருக்கும். 
‘மாண்புமிகு’ அமைச்சரே! கடந்த நூறு நாட்களாக முடங்கிக் கிடக்கும் தொழிலுக்கு என்ன செய்தீர்கள் நீங்கள்? ஊரடங்கு, ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று திட்டமில்லாமல் திட்டமென்ற பெயரில் செய்த குழப்பங்களால், குளறுபடிகளால் கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற தொழில்நகரங்களே பிழைக்க வழி தெரியாமல் மூச்சுத் திணறுகின்றனவே, அதற்கு என்ன வழிவகைகளை வைத்திருக்கிறீர்கள்? 
இருக்கும் பத்து மாதங்களில் இருப்பதையெல்லாம் சுரண்டிக் கொழிப்பதைத் தவிர எதை உருப்படியாகச் செய்திருக்கிறீர்கள்? சிறு, குறு தொழில் முனைவோர் மீண்டெழ என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது இந்த அரசாங்கம்? கடன் வாங்கி மின் கட்டணம் கட்டியிருக்கும் வருமானமில்லாத தொழில் முனைவோருக்கு என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறீர்கள்? கட்டணத்தைச் செலுத்த கால அவகாசமாவது கொடுங்கள் என்று கண்ணீரோடு நிற்கும் மக்களை பற்றி சிறிதாவது சிந்தியுங்கள். அடிமைகள் அரசால், ஏழைகள் விடும் கண்ணீரை துடைக்கும் முதல்வராக, இன்னமும் பத்து மாதங்களில்  மு.க. ஸ்டாலின் பதவியேற்பார். மக்கள் நலன் காப்பார்” என அறிக்கையில் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.