திருப்போரூர் துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதர் குமார் ஆகியோர் கோயில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். இதனை திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்துள்ளது. இதில்,  எம்எல்ஏ இதயவர்மன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு காரிலும், இன்னொரு குண்டு ஸ்ரீநிவாசன் என்பவர் மீது பாய்ந்துள்ளது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திமுக எம்எல்ஏ இதயவர்மன் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் பரிசோதனை செய்யப்பட்டது, அதில், 3 துப்பாக்கிகள் மற்றும் 50 துப்பாக்கி குண்டுகள் சிக்கியது.  இதையடுத்து திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், எம்எல்ஏ இதயவர்மன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.