மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு அரசியல் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின்  எம்எல்ஏவும்,   15 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராகவும் இருந்த ஜெ.அன்பழகன்(62) கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.

மறைந்த ஜெ.அன்பழகனை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசியல்ரீதியாக சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுவார். அதேபோல், விறுவிறுப்பாக நடக்கும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வந்தார். வழக்கமான அரசியல்வாதிக்கு உரிய குணங்களில் இருந்து சற்று மாறுபடக் கூடியவர் ஜெ.அன்பழகன். எப்போதும் தன்னுடன் இளைஞர் படைகளுக்கு முன்னுரிமை அளித்து வந்தார். தன்னை சுற்றி வயதான கும்பலை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்போதும் இளைஞர்களுடன் வலம் வந்தார். 

இந்நிலையில், சென்னை மாநகரில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு தி.மு.க-வினர் நிவாரண உதவிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் நிவாரண உதவிகள் வழங்குவதில் வேகம் காட்டிவந்தார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.