திமுக ஒரு புதைக்குழி என்றும் இனி அவர்களுக்கு வாழ்க்கை கிடையாது என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்களது சொந்த செலவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான ஏரிகளில் திமுக சார்பில் தூர்வாரப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள  கச்சிராப்பாளையம் ஏரியை கடந்த வாரம் திமுகவினர் தூர்வாரி சுத்தம் செய்தனர்.

இதனிடையே கச்சிராப்பாளையம் ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த  ஏரியை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் வந்தார்.

ஆனால் போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என கூறி ஸ்டாலினுக்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி அவர் ஏரியை பார்வையிட சென்றார்.

இதனால் போலீசார் அவரை கைது செய்து மாலை விடுவித்தனர். இந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஒரு புதைக்குழி என்றும் இனி அவர்களுக்கு வாழ்க்கை கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது தூர்வாற சொல்லியிருந்தால் பட்டா போட்டு வித்திருப்பார்கள் எனவும், அவர்களின் அரசியல் நோக்கத்திற்காகவே தூர் வாரப்படுகிறது எனவும் தெரிவித்தார்.