மதுரையில் ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை மாநகராட்சியின் திமுக முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. இவரது மருமகன் எம்.எஸ்.பாண்டியன் மதுரை சிந்தாமணி பகுதியில் வாக்களிக்க வந்தார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். அப்போது உயிருக்கு பயந்து ஓரு வீட்டுக்குள் ஓடியவரை துரத்தி சரமாரியாக வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பியது. உயிருக்கு போராடிய எம்.எஸ்.பாண்டியன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டியன் உயிரிழ்ந்தார். அவரது உடல் ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸ் விசாரணை தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

முன்விரோதத்தால் நடந்த கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரும் அதிமுகவை சேர்ந்தவருமான ராஜபாண்டியன் தரப்பினர் கீழவெளி வீதி பகுதியில் அரிவாளால் வெட்டியதாக பாண்டியன் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். 

திமுக பிரமுகரான வி.கே.குருசாமி தரப்புக்கும், அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பகை இருந்து வருகிறவதும், இரு தரப்பிலும் இதுவரை 20 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. இரண்டு தரப்பும் கொலை வெறியோடு பகை தீர்த்துக்கொள்ள அலைந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதைக் காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் வி.கே.குருசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மருமகன் எம்.எஸ்.பாண்டியன் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரும் திமுகவில் முக்கியப்பொறுப்பில் உள்ளார்.