விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றி அதிரடி உள்ளது.  

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அப்போது இரு தீர்மானக்கள் நிறைவேற்றப்பட்டன. கஜா புயல் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட வேறு சில  மாவட்டங்களும் இதுவரை காணாத மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, 65 பேருக்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் தங்களின் வேளாண்மையைப் பறிகொடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளை எல்லாம் இழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி பரிதவித்து நிற்கிறார்கள். பாசனநீர் பிரச்சினை காரணமாக நெல் விவசாயத்திலிருந்து தென்னை விவசாயத்திற்கு மாறிய பல விவசாயிகள், தாங்கள் வளர்த்த அனைத்து தென்னை மரங்களும் புயலால்  முறிந்து விழுந்ததன் காரணமாக, தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையோடு இருக்கிறார்கள். அதுபோலவே, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களை வளர்த்த விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். வீடுகளை இழந்துள்ள மக்கள் இன்னும் சகஜ நிலைக்குத்  திரும்ப முடியாமல் சங்கடத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

 

நவம்பர் 15ம் தேதி நள்ளிரவில் வீசிய பலத்த புயல் பாதிப்புகளால் இழந்த வாழ்க்கையை மீட்டு எடுக்க, நிவாரணங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் தேவையான “கஜா புயல்  பேரிடர் நிதி” இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு வழங்காமல் தாமதிக்கிறது. பேரிடர் நிதியை உரிய காலத்தில் கேட்டுப் பெற முடியாத அ.தி.மு.க அரசு, பாராளுமன்றத்தில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக அமளியில் ஈடுபடுகிறதே தவிர, கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை முற்றிலும் கிடப்பில் போட்டு மக்களை தினந்தோறும் போராட்டக் களத்தில் தள்ளியிருக்கிறது.

தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்  புறக்கணித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், நிவாரணம் மற்றும் மீட்புப்  பணிகளை முடக்கி வைத்துள்ள அ.தி.மு.க அரசுக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறது.

 

இனியும் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக கஜா பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவும், புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக் கடன்களை தள்ளுபடி செய்யவும், அவர்களுக்கான நிவாரண உதவிகளை விரைவில் வழங்கவும் அ.தி.மு.க அரசு  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூட்டம் வலியுறுத்தப்பட்டது.